கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18ஆம் தேதி வாந்தி, வயிற்றுபோக்கு, வயிற்று எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்த பலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்த சில மணி நேரத்தில் அதே பாதிப்புடன் பலரும் மருத்துவமனைக்கு விரைந்த நிலையில், சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அனைவரும் கள்ளச்சாராயம் அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி, சேலம் மருத்துவமனையில் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் 27 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், 110க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
சிகிச்சை பெற்று வருபவர்கள் 3 பேரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு பொது மருத்துவப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் குழு – முதல்வர் ஆலோசனை!
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாராம் தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று (ஜூன் 21) முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறது.
கள்ளக்குறிச்சியில் தற்போதைய நிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் குழு முதல்வரிடம் தெரிவிக்க உள்ளனர்.
சட்டப்பேரவை கூடும் முன்பு நேரில் ஆய்வு செய்த 3 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இயக்குநர் பெயர் இல்லாமல் வெளியான ஆர்.ஜே.பாலாஜி புதுப்பட அறிவிப்பு!