இயக்குநர் பெயர் இல்லாமல் ஒரு திரைப்படத்தின் அறிவிப்பை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இதுவரை அறிவித்தது இல்லை. அப்படியொரு அறிவிப்பு நடிகர் R.J. பாலாஜி நடிக்கும் புதிய படத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.
வானொலி, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. ஆரம்பத்தில் சிறு வேடங்களில் திரைப்படங்களில் நடித்த இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அரசியல் காமெடி படமான LKG வணிக அடிப்படையில் பெரும் வெற்றியை பெற்றது. 2020 ஆம்ஆண்டு நயன்தாரா நடிப்பில் இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் பின் இவரது நடிப்பில் வெளியான படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாத நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமாக மாசாணி அம்மன் எனும் பெயரில் படத்தை இயக்க போவதாக தகவல் வெளியானது.
இப்படத்தில் முதல் முறையாக அம்மன் வேடத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் அது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் R.J. பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த போஸ்டரில் ரத்தக் கறை படிந்த ஒரு கத்தியால் கேக்கை வெட்டி, ஒரு கையில் கேக் துண்டையும் மறு கையில் மெழுகுவர்த்தியை சிகரெட் போல் பிடித்துக் கொண்டும், சட்டை முழுக்க ரத்த கறைகளுடனும் ஆர்.ஜே.பாலாஜி இருக்கிறார்.
காமெடி நடிகராக சினிமா பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வரும் R.J. பாலாஜி சிகரெட்டாக மெழுகுவர்த்தியை பிடித்து கொண்டிருப்பதை பார்க்கும் போது இது ஒரு காமெடி படமாக இருக்கலாம் என்றே அனுமானிக்க வேண்டியுள்ளது. படத்தின் இயக்குநர், பிறநடிகர் நடிகைகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்