கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது மரக்காணம் சரக்கா? கன்னுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை விவரம்!

Published On:

| By Aara

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை ஜூன் 20 ஆம் தேதி இரவு  41 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை கவலைக்கிடமாகவும் இருக்கிறது. பலர் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ஜூன் 18 ஆம் தேதி இரவு மற்றும் ஜூன் 19 ஆம் தேதி காலையிலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 124 பேர்.

அவர்களில் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 55 பேர், சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் 44, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் 6 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் 19 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

 

அதில் இதுவரையில் 41 பேர் இறந்துள்ளனர், இன்னும் 9 பேர் உயர் சிகிச்சை பெற்று சீரியஸான நிலையில் உள்ளனர், 74 பேர் தீவிரமான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஜூன் 19 ஆம் தேதி மதியமே கள்ளச்சாராய சாவுகள் பற்றிய தகவல்களால் அலர்ட் ஆன காவல்துறை மேலிடம், வடக்கு, மத்திய, மேற்கு மண்டலத்தில் இருந்து சுமார் 1,300 போலீசாரை கள்ளக்குறிச்சிக்கு வரவழைத்து பாதுகாப்பு பணியில் இறக்கியது.

முதலில் இறப்பிற்கு காரணம் என்ன என்று அறிய தடய அறிவியல் இயக்குநர் சண்முகத்தை அழைத்து வந்து சோதனை செய்தனர். அவர், சாராயத்தில் மெத்தனால் கலந்து இருப்பதை உறுதி செய்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சாராயம் விற்பனை செய்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் மூவரை அழைத்து வந்து ஏடிஎஸ்பி திருமால் மற்றும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் மாறி மாறி விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னுக்குட்டி போலீஸாரிடம்,  “நான் 25 வருசத்துக்கு மேல சாராயம் வித்துக்கிட்டிருக்கேன். இதுவரைக்கும் என்கிட்ட சாராயம் குடிச்சவங்க ஒருத்தர் கூட செத்துப் போனதில்ல. இப்போது என்ன நடந்ததுனு எனக்கே தெரியலைங்க” என்று சொல்லியிருக்கிறான்.

இதைத் தொடர்ந்து கன்னுக்குட்டியை கேள்விகளால் துளைத்தனர் போலீஸார்.

சரிடா வழக்கமாக யாரிடம் சரக்கு வாங்குவே? அந்த சப்ளையர் யார்?

மலை அடிவாரத்தில் உள்ள சின்னத்துரைகிட்டதான் வாங்குவேன். அவர் இல்லேன்னா ஜோசப் ராஜ்கிட்ட வாங்குவேன்.

ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் விப்பே?

நான் ஒரு நாளைக்கு ஆயிரம் பாக்கெட் வரைக்கும் வித்துருக்கேன்...என்றிருக்கிறான் கன்னுக்குட்டி.

நேத்து வித்த சரக்கு இன்னும் இருக்கா? என போலீசார் கேட்க… அருகே நின்ற கன்னுக்குட்டியின் தம்பி தாமோதரன் போலீசாரிடம்,

ஒரு டியூப்ல 60 லிட்டர் இருக்கும். அப்படிதான் நாலு டியூப் வாங்கி வந்து, ஒரு டியூப் சாராயத்தை தண்ணீர் கலந்து விற்பனை செய்துட்டோம். ஒரு டியூப் சரக்கு இங்கதான் இருக்கு. மத்த ரெண்டு டியூப் சரக்கு எங்கே போச்சுனு தெரியலை” என்று பதுக்கி வைத்திருந்ததை போலீஸிடம் எடுத்து கொடுத்து விட்டான்.

அந்த ஒரு டியூப்பில் இருந்த சரக்கைதான் பரிசோதனை செய்தபோது மெத்தனால் கலந்து இருப்பது தெரிந்தது.

இன்னும் இரண்டு டியூப் சரக்கு எங்கே போயிருக்கு என்று போலீசார் தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர்.

சாராய சப்ளையர் சின்னத்துரையை கைது செய்திருக்கிறது போலீஸ். இன்னொருவரான  ஜோசப் ராஜ் இன்னும் போலீசிடம் சிக்கவில்லை. தனிப்படை தேடி வருகிறது.

இந்த நிலையில்தான் விசாரணை அதிகாரிகளுக்கு சில சாராய வியாபாரிகளிடம் இருந்து அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, கன்னுக்குட்டி வழக்கமாக சின்னத்துரை மற்றும் ஜோசப் இருவரிடம் இந்த முறை சாராயம் வாங்கவில்லை. கடந்த ஆண்டு மரக்காணம் கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான ஹோல்சேல் சாராய வியாபாரியிடம் வாங்கிய சரக்குதான் இது  என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக மரக்காணம் மதன் என்ற வியாபாரியை தற்போது விசாரித்து வருவதாக சொல்கிறார்கள் கள்ளக்குறிச்சி காவல்துறையினர்.

அப்படியென்றால் கடந்த ஆண்டு மரக்காணம் சாராய சாவுகளுக்குக் காரணமான ஹோல் சேல் வியாபாரி இப்போது வரை தனது கள்ளச்சாராய வியாபாரத்தை கனகச்சிதமாக நடத்தி வருவதை போலீஸே கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது.

நான்கு டியூப்பில் மீதி இரண்டு டியூப் எங்கே போயிருக்கும் அதைக் குடித்தால் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறது காவல் துறை.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளக்குறிச்சி மரணம்: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக!

கள்ளச்சாராய மரணம்: கள்ளக்குறிச்சியில் விஜய்…. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share