திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 8) திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சர்ச்சை பேச்சுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.
அதாவது சென்னையில் நடந்த பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தையும் திமுக ஆட்சி காலத்தையும் ஒப்பிட்டு பேசியிருந்தார். கொரோனாவில் இவரே போயிருப்பார் என்று முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் விழுப்புரம் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , தோல்வி பயத்தில் பழனிசாமி தினம் தராதரம் இல்லாமல் தரங்கெட்டு பேசுகிறார். இன்றைக்கு மாலை சென்னையில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? தி.மு.க. ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், இவரே போயிருப்பார் என்று என்னை பேசியிருக்கிறார்.
பழனிசாமி அவர்களே… என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே… மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் அல்ல. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976-இல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான்.
ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான். பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் என்னுடைய தலைவர் என்னுடைய தந்தை கலைஞர். கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான், இந்தக் கொரோனாவுக்கா பயப்படப் போகிறேன்.
கொரோனா மேல் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தபோதே, அதற்கான PPE உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்றவன்தான் இந்த ஸ்டாலின். இதுவரை யாருக்கும் சொல்லாததை இப்போது சொல்கிறேன்… இவ்வாறு நான் கொரோனா வார்டுக்குள் செல்லப் போகிறேன் என்று யாரிடமும் நான் சொல்லவில்லை. கலெக்டர், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள், என் உதவியாளர்கள் என்று அனைவரும் இருந்தார்கள். ஆனால் யாரிடமும் நான் சொல்லவில்லை. இப்படி நான் சொல்லாமல் சென்ற காரணத்தினால், என் மனைவி துர்காவதி என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். இது சத்தியம்… மக்களைக் காக்க எந்தளவுக்கும் துணிச்சலாக செல்லக்கூடியவன். அதற்கெல்லாம் பயந்து அரசியல் தலைவராக நான் இல்லை.
பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இனமானப் பேராசிரியர் என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பின்பு பழனிசாமி வென்றதே இல்லை. தி.மு.க. தலைவரான பின் உங்கள் ஆதரவால் நான் தோற்றதே இல்லை.
பா.ஜ.க. எனும் பேரழிவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர நினைக்கும் பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை இந்தத் தேர்தலில் கொடுக்க வேண்டும்.
உண்மையில், நடக்கும் தேர்தல் என்பது, டெல்லிக்கும் – தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு, டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது! தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பா.ஜ.க.வும், அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு, திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்” என்றார்.
