திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை இடங்கள் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னும் வெளிப்படையாக விடை கிடைக்காத நிலையில்… பானை சின்னத்தை தங்களுக்கு பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.
இன்று (பிப்ரவரி 20) டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்த திருமாவளவன், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
“தேர்தல் ஆணையர்கள் யாரையும் பார்க்க இயலவில்லை. தற்போது நாங்கள் இதற்கென உள்ள பிரிவில் எங்கள் மனுவை சமர்ப்பித்திருக்கிறோம். VCK Contest in five states
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பிலே நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம்.
ஆகவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சுயேச்சை சின்னத்தில் இருந்து பானை சின்னத்தை பொதுச் சின்னமாக முன்கூட்டியே ஒதுக்கித் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் சந்தேகம் இல்லை.
அண்மை காலமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பு அது சுதந்திரமாக செயல்பட வேண்டும். விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும்” என்றவரிடம்,
திமுக உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி வலியுறுத்துகிறதா?” என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், “இந்த கேள்விக்கு இடமே இல்லை ஏனென்றால், சட்டமன்றத் தேர்தலிலேயே நாங்கள் ஆறு தேர்தலிலும் பானை சின்னத்தில் தான் நின்றோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை நோக்கமாக வைத்து திமுக தரப்பில் இதுபோன்ற கருத்து சொல்லப்பட்டதே தவிர, விடுதலை சிறுத்தைகளை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அது செய்யப்படவில்லை. அதனால் இது ஒரு பிரச்சினையே இல்லை” என்றார் திருமாவளவன்.
பொதுத் தொகுதி பற்றிய கேள்விக்கு, “நாங்கள் 2001 முதல் பொதுத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கூட்டணியில் கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்., சட்டமன்றத் தேர்தலில் கூட இரு பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டோம். அதே அடிப்படையில்தான் நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுத் தொகுதி வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்” என்றார் திருமாவளவன்.
திருமாவளவனுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி, துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் இருந்தனர். VCK Contest in five states
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
TN Agri Budget: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.7,000 கோடி!