நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வலிமைமிக்கதாக இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று (ஜனவரி 26) நடைபெற உள்ளது.
இதற்காக இன்று திருச்சி வந்தடைந்த திருமாவளவனை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள்.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். சமூக நீதியை அழித்து எறிந்து விடுவார்கள். தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும்.
ஆகவே, ஜனநாயகத்தை காப்பாற்ற, அரசியலமைப்பை காப்பாற்ற, சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.
மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியே போகிறோம் என்று சொல்லவில்லை. காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வை எட்ட முடியவில்லை. அதனால் தான் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் இருப்பதாக தான் சொல்லி இருக்கிறார்கள்.
அதற்கு அர்த்தம் என்னவென்றால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமிருக்கிறது என்று தான் பொருள். அதனால் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன்.
அதே போல ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும் தான் தனித்துப் போட்டியிடுவதாக சொல்லி இருக்கிறதே தவிர டெல்லி உள்ளிட்ட இதர மாநிலங்களில் சொல்லவில்லை. இதுவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
எனவே இந்தியா கூட்டணியில் சின்ன சின்ன முரண்பாடுகள் இருந்தாலும் கூட கூட்டணி உறுதியாக இருக்கும். தேர்தலுக்கு பின்னர் வலிமைமிக்கதாக இருக்கும் என்பதையும் உணர முடியும்.
காங்கிரஸ் நிறைய விட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. ஒரு தேசிய கட்சி என்று இருந்திருந்தால் இந்த கூட்டணி உருவாகி இருக்காது. காங்கிரஸை பொறுத்தவரை மிக நெகிழ்வாக விட்டுக் கொடுத்து எல்லோரையும் அரவணைக்க கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து ”மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடுகிறீர்களா?” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அது எனது சொந்த தொகுதி” என்று பதிலளித்தார் திருமாவளவன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
”ஏழையா செத்தாலும்” பிக்பாஸ் போட்டியாளரின் திடீர் பஞ்ச்!
”உதிரன் வருகிறான்”: கங்குவா அப்டேட்!