இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரானின் கூட்டாளியான ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களை பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கியும் விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த 72 மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் மேற்பட்ட நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த போர் இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தநிலையில் ஈரானுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
அப்போது, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் சீனா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாகத் தங்களது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் திட்டமிட்டுப் போரைத் தூண்டுவதன் மூலம் ஐநா சாசனத்தின் கொள்கைகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
“வலிமையான நாடுகள் தங்களது ராணுவ பலத்தைக் கொண்டு மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் தாக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ள சீனா, உலகம் “காட்டுச் சட்டத்திற்கு” திரும்புவதை அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளது.
