அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எதிரான வழக்கு- எடப்பாடி பழனிசாமி மனு டிஸ்மிஸ்!

Published On:

| By Mathi

EPS Case Chennai

அதிமுக பொதுச்செயலாளராக தாம் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை (Case Against AIADMK General Secretary Post) நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் வழக்கறிஞர் சூரியமூர்த்தி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

ஆனால், இந்த வழக்கைத் தாக்கல் செய்த திண்டுக்கல் சூரியமூர்த்தி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை; வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர்; ஆகையால் சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கில், அதிமுக கட்சி விதிகளின் படி உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை; அதிமுக விதிப்படி கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; தாம் அதிமுக உறுப்பினர்தான் என சூரியமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வாதத்தை ஏற்று சூரியமூர்த்திக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி தள்ளுபடி செய்தது.

சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக வழக்கறிஞர் சூரியமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 11.7.2022 அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

2022-ம் ஆண்டு நடந்த அந்த பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால், நான் அதிமுகவின் உறுப்பினர் இல்லை; வேறு கட்சியை சேர்ந்தவன்; அதனால் நான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், அதிமுகவில் நான் உறுப்பினர் தான் என்பதை உறுதி செய்தது; மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக வழக்கின் பிரதான விசாரணையில் தெரியவரும் என கூறி எனக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பிரதான வழக்கின் விசாரணை செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும்.

1972ல் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம் ஜி ஆர் கட்சியில் பொதுக்குழுவுக்கு எல்லா விதிகளையும் திருத்த அதிகாரம் உண்டு, ஆனால் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் விதிகளை மட்டும் நீக்க, மாற்ற முடியாது குறிப்பிட்டிருந்தார்; அதிமுக கட்சி விதிகளின்படி, கட்சிப் பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்; இதையே ஜெயலலிதாவும் பின்பற்றினார்.

2022 பொதுக்குழுவின் தீர்மானங்களை எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை, எந்த ஒரு நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமியே அதிமுக பொதுச் செயலாளர் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு சூரிய மூர்த்தி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share