திருநெல்வேலியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் (AIADMK BJP) நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி இரவு 1 மணிநேரம் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து 109 வகையான உணவுகளுடன் விருந்து பரிமாறப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டம் என்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்களுக்கு தமது வீட்டில் பிரம்மாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்துக்கு முன்னதாக நயினார் நாகேந்திரன் இல்லத்தில் முதல் மாடியில் பாஜக- அதிமுக தலைவர்கள் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதிமுகவின் தளவாய் சுந்தரம், எஸ்பி வேலுமணி, ஆர்பி உதயகுமார், விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம், ராஜலட்சுமி உள்ளிட்டோரும் பாஜக சார்பில் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இருவரும் நேற்று ஈரோட்டில் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போதும் இரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் விருந்திலும் அண்ணாமலை பங்கேற்காமல் புறக்கணித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் விவாதித்தனர்.

109 வகை உணவுகளுடன் விருந்து
இதனைத் தொடர்ந்து 109 வகையான உணவுகளுடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு விருந்து பரிமாறப்பட்டது.
- 4 வகை ஸ்பானீஷ், சைனீஸ் சூப்கள்
- 2 வகை தாய், இந்திய சாலட்டுகள்
- 9 வகையான ஸ்டார்டர்கள்
- 3 வகையான பார்பிக்யூ
- 5 வகையான வடமாநில சாட்
- 3 வகை நெல்லை அல்வா
- 11 வகை இனிப்புகள்
- 3 வகையான போளிகள்
- 2 வகை இட்லிகள்
- அம்மனி கொழுக்கட்டை
- பூண்டு குழம்பு
- சிவப்பு சம்பா இடியாப்பம்
- நெல்லை சொதி
- கேரளா புட்டு
- குஜராத் டோக்ளா
- 4 வகை பஞ்சாப், டெல்லி ரொட்டிகள்
- சிறுதானிய உணவுகள்
- 8 வகை சாதங்கள்
- 8 வகை வடமாநில காய்கறிகள்
- 14 வகை தோசைகள்
- 6 வகை அப்பளங்கள்
- சுக்கு பனங்கற்கண்டு பால்
- பில்டர் காபி
- நன்னாரி பால்
- 17 வகை ஐஸ்கிரீம்கள்
- 7 வகை ஜூஸ்கள் என மொத்தம் 109 வகை உணவுகள் பரிமாறப்பட்டன.
