சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் எளிய மனிதனாக இயல்பாக நடித்து அசத்தியவர் அப்புக்குட்டி.
கேரள தமிழக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருக்கும் தேனி மாவட்ட கிராமங்களின் வட்டாரத் தமிழ்ப் பேச்சு முறை, சமயம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள், கலைகள், வாழ்வியல், திருவிழா நடைமுறைகள் போன்றவை அடிப்படையில் வந்த படம் இது.
தேனி அருகே உள்ள மல்லயாபுரம் என்ற கிராமத்தில் வாழும் மக்கள் ஊர் திருவிழா கொண்டாட முடிவு செய்கின்றனர். திருவிழாவின் சிறப்பாக அழகர்சாமி கடவுள் மரத்தாலான குதிரையில் ஊர்வலம் வர வேண்டும். அந்த மரக்குதிரை திருவிழாவிற்கு சில நாட்கள் முன்பு காணாமல் போய்விடுகிறது. அதே சமயத்தில் அகமலை, பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி (அப்புக்குட்டி) மிகவும் அன்புடன் வளர்க்கும் அப்பு என்கிற குதிரையும் காணாமல் போய்விடுகிறது.
பிறப்பு முதலே அழகர்சாமியால் வளர்க்கப்பட்ட அந்த குதிரையில் சரக்கு ஏற்றி அதன் மூலமாக வரும் வருமானத்தை நம்பியிருக்கும் அழகர்சாமிக்கு, ராணி என்கிற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கிராம மக்களும் அழகர்சாமியும் அவரவர் குதிரைகளைக் கண்டுபிடித்தார்களா என்று போன படம் அது.
படத்துக்குப் பொருத்தமாக மிகவும் சிறப்பான நடிப்பை வழங்கிய அப்புக்குட்டிக்கு 2012 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு பதிமூன்று வருடங்கள் கழித்து இப்போது, அப்புக்குட்டி நடித்த ‘பிறந்த நாள்’ என்ற படம் 56’வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இன்னொரு படம் சிவ கார்த்திகேயனின் அமரன்.
அமரன் படம் மட்டுமல்ல. அப்புக்குட்டியின் இந்தப் படமும் விருதுகள் குவிக்கட்டும் . சிவகார்த்திகேயனோடு அப்புக்குட்டியும் விருது பெறட்டும்.
பெரிய நடிகர்களின் வெற்றி வியாபார வெற்றி .
எளிய நடிகர்களின் வெற்றி மேலும் பல நல்ல சினிமாக்களை உருவாக்கும் வெற்றி .அதில்தான் இன்னும் பல சிவகார்த்திகேயன்களும் கிடைப்பார்கள்.
- ராஜ திருமகன்
