ச. மோகன்
உலக நாகரிகப் படிநிலைகளில் 1876 ஆம் ஆண்டு தொல்லியல் அகழாய்வு நடந்த ‘ஆதிச்சநல்லூர் பரும்பு’ இருக்கும் புளியங்குளம் கிராமம் தான் “வாழை” திரைக் காவியத்தின் கதைக்களம்.
“வாழை” பற்றிய விமர்சனங்கள் ஏற்கெனவே நீண்டு கொண்டிருக்கும் வேளையில் இக்கட்டுரை துயரம் படர்ந்த கோர விபத்து ஏற்படுத்திய மீளா துயரின் பகிர்தலாகும். உயிரிழந்தோர்க்குப் படையல் ஆகும்.
புளியங்குளம் கிராமம் :
தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வற்றாத தாமிரபரணி ஆற்றின் கரையில் புளியங்குளம் கிராமம் அமைந்துள்ளது.
தமிழர் நிலத்திணைகளில் ஒன்றான மருத நிலத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் நெல்லும் வாழையும் விளைகின்றன. இங்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மட்டும் வாழ்கின்றனர்.
சுற்றுப்புறக் கிராமங்களில் நிலவிய சாதி ஆதிக்கத்திற்குச் சாவு மணி அடித்து “வீரம் விளைந்த மண்” என்ற புகழுக்குரியது புளியங்குளம் கிராமம் என்றால் மிகையன்று.
வாழைத் தார்:
நெல்லும் வாழையும் இவர்களது பயிர்த் தொழில். இதுவே இவர்களது வாழ்வாதாரம். பெரும்பாலும் புரட்டாசி மாதம் முதல் சித்திரை மாதம் வரை வாழைத்தார் வெட்டும் பணி இங்கு நடைபெறும்.
இங்குள்ள மக்களும், தேவைப்பட்டால் பக்கத்து கிராமத்தில் உள்ளவர்களும் விவசாயக் கூலிகளாக வாழைத்தார் சுமக்கும் பணி புரிவார்கள். ஆண் – பெண் இருபாலரும் இதில் அடங்குவர்.
உலகம் முழுவதும் மலிந்து காணப்படும் உழைப்புச் சுரண்டல் இங்கும் நிறைந்து காணப்பட்டது. பதினைந்து மைல் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இங்குள்ள மக்கள் வாழைத்தார் வெட்டி சுமக்கச் செல்வது வழக்கம்.
கோர விபத்து:
இத்தகைய காலச் சூழலில் வழக்கம் போல் 21.2.1999 ஞாயிறு அன்று புளியங்குளம், கீழ நாட்டார் குளம் கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஸ்ரீவைகுண்டம் – ஏரல் சாலையில் அமைந்துள்ள மாங்கொட்டாபுரம் கிராமத்திற்கு வாழைத்தார் வெட்டச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இதில் பள்ளி மாணவர்களும் அடங்குவர்.
இரண்டு லாரிகளுக்கு தேவையான அளவு வாழைத்தார்களை வெட்டினர். அவற்றை லாரிகளில் ஏற்றி முடிக்க இரவு சுமார் 7 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு ஊர் திரும்ப இரண்டாவதாகப் புறப்பட்ட தனலட்சுமி (TN 60 4705) என்ற லாரியில் ஏறினர்.
அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கிப் புறப்பட்ட லாரி சிறிது நேரத்திலேயே பேட்மா நகரம் ஊருக்கு சிறிது முன்பே ஒற்றைச் சாலையில் பெரும் பாரத்தைத் தாங்க முடியாமல் நிலை தடுமாறிப் பள்ளத்திலிருந்த வயல்வெளியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
லாரி டிரைவருக்கு மேல் பகுதியில் அமர்ந்திருந்த 9 பேர் தூக்கி வீசப்பட்டனர். நல்வாய்ப்பாக அவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். கெடுவாய்ப்பாக தலைகுப்புற கவிழ்ந்த லாரிக்கு அடியில் வயலின் சகதிக்குள் மற்றவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.
உயிர் தப்பியவர்கள் ஓடோடிச் சென்று அருகிலுள்ள மக்களை உதவிக்கு அழைத்தனர். பாரத்துடன் கவிழ்ந்த லாரியை தூக்கி நிறுத்த தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து “பாரந் தூக்கி” (crane) வரவழைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தீயணைப்பு வீரர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் என அரசு அதிகாரிகள் பட்டாளம் அங்கே முகாமிட்டது. அவர்களின் முயற்சியால் உயிரற்ற சடலங்களைத் தான் மீட்க முடிந்தது. கவிழ்ந்த லாரியை விரைந்து தூக்கி நிறுத்தும் தொழில் நுட்ப உதவி அருகாமையில் இல்லை. இதனால் 19 பேர் சாவைத் தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
இறந்தோர்:
இந்தக் கோர விபத்தில் புளியங்குளத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் மாணவர்கள். முத்துரவி, நயினார், முத்துக்குமார் ஆகிய மூவரும் கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள். பால்ராஜ் அந்தப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவர்களோடு தர்மர், ரத்தினம், லட்சுமி, பரமேஸ்வரி, முருகம்மாள், ராணி, கஸ்தூரி, புஷ்பம், உச்சிமாகாளி, மூக்கம்மாள் ஆகியோர் உயிரிழந்தோர் ஆவர்.
இவர்களுடன் கீழ நாட்டார்குளத்தைச் சேர்ந்த ஜெயபதி, நீலா, மூக்கம்மாள், கோமதி ஆகிய நால்வர் உயிரிழந்தனர். இதில் ஜெயபதி திருமணமாகி ஆறு மாதங்களே ஆன புது மாப்பிள்ளை என்பது வேதனையும் சோகமும் நிறைந்த சேதியாகும்.
விபத்தில் காயம் அடைந்தோர் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனையிலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
வாழைத்தார் வியாபாரி மேகலிங்கம், லாரி ஓட்டுநர் குணசேகரன், லாரி உரிமையாளர் ஆகியோர் மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்த நேரத்தில் இந்தக் கோர விபத்து ஏற்பட்டதால், அங்கும் வாத விவாதம் நடைபெற்றது. வெளிநடப்பு செய்யப்பட்டது. அரசின் வழக்கமான நடைமுறைப்படி அன்றைய முதல்வர் மு.கருணாநிதி உயிரிழந்தோர்க்கு தலா ரூ50,000 இழப்பீடாக அறிவித்தார்.
லாரியில் ஏற்றப்பட்ட பாரத்தின் மீது பயணம் செய்யும் போது உயிரிழப்பு ஏற்பட்டதைக் காரணங்காட்டி காப்பீடு மறுக்கப்பட்டது. வழக்கும் நிற்கவில்லை.
விபத்துக்குப் பின்…
இந்தக் கோர நிகழ்வுக்குப் பின் பள்ளி மாணவர்கள் வாழைத்தார் சுமக்கச் செல்வதில்லை. மாறாக வெல்டிங் வேலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். லாரியில் வாழைத்தார் ஏற்றுவதில்லை. சிறு வண்டிகளில், மினி லாரிகளில் வாழைத்தார் ஏற்றுகின்றனர். வாழைத்தார் சுமந்து நீண்ட தூரம் நடக்க வேண்டியது இல்லை. வாழைத்தார் வெட்டும் பகுதிக்கு அருகாமையிலேயே சிறு வண்டிகள் வந்து பாரம் ஏற்றிக் கொள்கின்றன.
இந்தக் கோர விபத்துக்குப் பின் அந்தக் கிராமத்தை விட்டு யாரும் வெளியேறவில்லை. முன்பை விட ஊர் பெரிதாகிவிட்டது. மக்கள் தொகை பெருக்கம் அடைந்துள்ளது.பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப வாழைத்தார் சுமை கூலி பத்து ரூபாயில் இருந்து 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வழமையான உழைப்பின் வலியும் உழைப்புச் சுரண்டலும் தொடர்கிறது.
திரைக் காவியம்:
இந்த உண்மை நிகழ்வு வாழ்வியலின் பன்முகத்தன்மையுடன் திரைக் காவியமாய் உருப்பெற்றுள்ளது.
உழைப்பின் வலி, உழைப்பின் சுரண்டல் இவற்றால் ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் படம் முழுவதும் காண முடிகிறது.
வாழ்வாதாரத்தை ஈட்டும் வலியின் முழுமையை “வாழை” தழுவி நிற்கிறது. உழைப்பைச் சுரண்டுவது, உழைப்பின் மதிப்பீடுகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மருதநில மக்களின் அடையாளம், பண்பாடு, வாழ்வியல் போன்றன குறியீடுகளால் சித்தரிக்கப்படுகின்றன.
சமூகவியல் நோக்கில் சிந்திக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் மனக்கடலில் எழுந்த 19 பேருடைய இறப்பின் நினைவலைகள்…… வெவ்வேறு கோணங்களில் பன்முகப் பார்வையில் கருத்தரித்துள்ளது. துயர்மிகு படையலாய் பிரசவித்துள்ளது.
கோர நிகழ்வின் வீரியத்தை, சோகத்தை …. ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் படத்தொகுப்பும் பார்வையாளர்களின் மனதில் இறங்கி கண்களை பனிக்கச் செய்கின்றன.
நவீன திரைப்படங்களின் தற்காலப் போக்கில் ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகத் தமிழ்த் திரையுலகம் உறைந்து கிடக்கிறது.
இந்நிலையில் அழகியலிலும் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் ஒரு புத்தாக்கம் உயிர்ப்புடன் “வாழை” திரைக் காவியத்தில் தெரிகிறது.
திரையுலக வரைபடத்தில் “வாழை” தோரணங் கட்டும் விருதுகளால்.
கட்டுரையாளர் குறிப்பு:
எழுத்தாளர் ச.மோகன், மும்பையில் Bold India நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். MUDRA communications (Reliance), Coromandel Info Tech, நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர். மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் இணை இயக்குநராக பணியாற்றியவர். மின்னணு ஊடகங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். தற்சமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது சொந்த கிராமமான தெய்வச்செயல் புரத்தில் வசித்து வருகிறார்.
தொடர்புக்கு: 999 4368 502.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கை முட்டிகளில் கருமையைப் போக்க உதவும் மூன்று ஸ்டெப்ஸ்!
டாப் 10 நியூஸ் : அமெரிக்கா செல்லும் முதல்வர் முதல் பாரிஸ் பாராலிம்பிக் துவக்கம் வரை!
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் குக்கீஸ்
சத்ரபதி சிவாஜி சிலைக்கு மோடி கேரண்டி… அப்டேட் குமாரு