அமெரிக்கா செல்கிறார் முதல்வர்!
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!
திமுக எம்பி-யான தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உள்ளார்.
9 இடங்களில் மறியல் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
நேரில் ஆஜராக உத்தரவு!
இரண்டாவது தேசிய நீதிபதிகள் ஊதிய குழுவின் (எஸ்என்ஜேபிசி) பரிந்துரைகளை அமல்படுத்தாதது தொடர்பாக, தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் இன்று நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
AMMA – அவசர ஆலோசனை கூட்டம்!
மலையாள திரையுலக நடிகைகள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் (AMMA) அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மதுரை – தாம்பரம் சிறப்பு ரயில்!
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06184) இயக்கப்படவுள்ளது. மறுநாள் காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
பாரீஸ் பாராலிம்பிக் போட்டி துவக்கம்!
பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் 84 பேர் களமிறங்குகின்றனர்.
ஒயிட் வாஷ் செய்யுமா வெஸ்ட் இண்டீஸ்?
வெஸ்ட் இண்டீஸ் – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
மிதமான மழை பெய்யக்கூடும்!
தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 163-வது நாளாக இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும். டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் குக்கீஸ்
“அண்ணாமலையின் பொய்க்கால் ஆட்டத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்”…. விளாசிய ஆர்.பி.உதயகுமார்!