நீட் தேர்வுக்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதன் முடிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், “நாம் எல்லாம் தண்ணீர் கூட குடிக்காமல் வருத்திக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டோம். இது பெரிய வலி கிடையாது. 21 உயிரை பலி கொடுத்திருக்கிறோம். அதுதான் பெரிய வலி.
அரியலூர் அனிதா, செஞ்சி பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, சேலையூர் ஏஞ்சலின் சுருதி, திருப்பூரு ரீத்துஸ்ரீ, கூனிமேடு மோனிஷா, பட்டுக்கோட்டை வைஸ்யா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ, செந்துறை விக்னேஷ், தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால், கரூர் ப்ரீத்தாஸ்ரீ, அரியலூர் நிஷாந்தி, மேட்டூர் தனுஷ், துவரங்குறிச்சி கனிமொழி, மதுரை ஜோதிகாஸ்ரீ, காட்பாடி சவுந்தர்யா, குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் என 21 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஜெகதீஸ்வரன் தந்தையோடு 22 பேரை பலி கொடுத்திருக்கிறோம்” என்று பட்டியலிட்டார்.
அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை!
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த 21 தற்கொலையும், தற்கொலை அல்ல கொலை. இந்த கொலையை செய்தது மத்திய அரசு. இதற்கு துணை நின்றது அதிமுக.
இந்நிகழ்ச்சியில் அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ நான் பங்கேற்கவில்லை. சாதாரண மனிதனாக, உயிரிழந்த 21 பேரின் அண்ணனாக கலந்துகொண்டுள்ளேன்.
இந்த போராட்டத்தை அறிவித்தவுடன், நீங்கள் கலந்துகொள்ள கூடாது. சட்ட சிக்கல் வரும், அமைச்சர் பொறுப்பு பறிக்கப்படும், தகுதி இழப்பு நடக்கப்படும் என்று சொன்னார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிமுகவின் ஒரு வழக்கறிஞர் ஒரு புகாரே கொடுத்திருக்கிறார். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று அதில் கூறியிருக்கிறார்.
அதற்கு நான் சொன்னேன், இந்த அமைச்சர் பதவி இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என சொல்லிதான் போராட்டத்தில் கலந்துகொண்டேன். திமுக பொறுப்பில் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது கிடையாது. மாணவர்கள் முக்கியம் என்றுதான் இந்த போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
ஆளுநருக்கு திமிரு கொழுப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எவ்வளவு திமிரு, எவ்வளவு கொழுப்பு இருக்கும்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்துகிறார் ஆளுநர். அதில் ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் எழுந்து குரல் கொடுக்கிறார்.
நாங்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டு வரவில்லை. வெற்றி பெற்றுதான் வந்திருக்கிறோம். நீட்டை ரத்து செய்யுங்கள் என்கிறார்.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி திமிருத்தனமாக, ” I will never, ever “ என்கிறார். நான் கேட்கிறேன் ஆளுநரே, “who are you? what authority you have” (நீங்கள் யார், உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” என்று ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார் உதயநிதி.
நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்களா? நீங்கள் ஒரு போஸ்ட்மேன் எனவும் ஆவேசமாக பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், “எங்கள் முதலமைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் போய் சொல்வதுதான் உங்கள் வேலை. நீங்கள் ஒரு தபால் காரர். மரியாதை கொடுத்தால் போய்க்கொண்டே இருக்கிறீர்கள்.
தேர்தலில் போட்டியிட தயாரா?
அவர் பெயர் ஆர்.என்.ரவி இல்லை… ஆர்.எஸ்.எஸ்.ரவி. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாட்டில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து நில்லுங்கள்? நான் நிற்கவில்லை, எங்கள் முதல்வர் நிற்கவில்லை.
திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிற்க வைக்கிறோம். உங்களால் வெற்றி பெற முடியுமா என்று பார்ப்போம். உங்களது பித்தலாட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள். செருப்பை கழட்டி அடிப்பார்கள்.
நீங்கள் வெற்றிபெற்று விட்டு வந்தால் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறேன். நீட்டுக்கு ஆதரவாக நானே வருகிறேன்” என்று சவால் விடுத்தார்.

அனிதாவில் ஆரம்பித்து இந்த 21 மாணவர்களின் வீடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன் என்று கூறிய உதயநிதி, “ஜெகதீசன் இறப்புக்கு போன போது, அவரது நண்பர் பயாசூதீன் என்னை பார்த்து கத்தினான். அவரை நான் மேடையில் ஏற்றி பேச வைத்தேன்.
ஆனால் ஆளுநரை எதிர்த்து கேள்வி கேட்டவரை எதிர்த்து புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுத்துப்பாருங்கள் மக்கள் சும்மா விடமாட்டார்கள்.
அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அவரது வேலைக்கு எதாவது பிரச்சினை செய்தால் நாங்கள் சும்மா விடமாட்டோம். தமிழ்நாட்டு மக்களை பற்றி உங்களுக்குத் தெரியாது ஆளுநரே.
நீட் தேர்வுக்கு எதிராக வாக்குறுதி கொடுத்தோம். அந்த வாக்குறுதிக்கான முழு முயற்சியையும் முதல்வர் எடுத்துக்கொண்டிருக்கிறார். முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்தார். அந்த குழு தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை சந்தித்தது. நீட் தேர்வால் எவ்வளவு பாதிப்பு என்று சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தோம்.
சட்ட மசோதா இயற்றினோம். அதற்கு அதிமுகவும்தான் வாக்களித்தது. 4 பேர் வாக்களிக்கவில்லை. அவர்கள் பாஜக. வெளிநடப்பு செய்தார்கள்.
இந்த சட்டமசோதாவை ஆளுநருக்கு அனுப்பினோம். அவர் திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டார்.
கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு!
நாங்கள் உடனே சொன்னோம், அதிமுக ஆட்சியில் இதேபோல் ஒரு சட்டமசோதா அனுப்பி வைத்தார்கள். அது ஒரு வருடம் எங்கே போனது என்று தெரியவில்லை. அதிமுகவினர், வந்துவிடும், வந்துவிடும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
இந்நிலையில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மசோதாவை நிறைவேற்றி அனுப்பினார் முதல்வர். அதையும் ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைக்காமல் இருந்தார்.
இதையடுத்து அமைச்சர்களை அனுப்பி வைத்தார் முதல்வர். இப்போது மசோதா ஜனாதிபதியிடம் இருக்கிறது. ஆனால் எந்த பதிலும் இல்லை. ஆளுநர் இங்கே உட்கார்ந்து கொண்டு முடியாது என்கிறார்.
ஒரு சிலர் மருத்துவ படிப்புதானே. அது இல்லை என்றால் வேறு படிப்பு இல்லையா என சிலர் கேட்கிறார்கள். அதை கேட்க நீங்கள் யார்? தகுதியற்ற தேர்வு நீட். அதை ஒழிக்கும் நாள் தான் தமிழ்நாட்டுக்கு விடியல். அதை களத்தில் இறங்கி திமுக செய்யும்.
இது ஆரம்பம் தான் முடிவல்ல. ஒவ்வொரு கல்லூரி மாணவர்களும் போராட வேண்டும். மாடு பிடிப்பதற்காக சண்டை போட்டோம். மாணவர்களின் உயிருக்காக சண்டை போட மாட்டோமா?
மாணவர்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக முதல்வர் நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கித் தருவார். இந்த உண்ணாவிரத போராட்டம் தேவையற்றது என்று பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறார். நான் சொல்கிறேன் தமிழ்நாட்டுக்கு பாஜக தேவையற்றது’ என்று காட்டமாக பேசினார்.
பிரியா
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை: அதிமுக மாநாட்டில் தீர்மானம்!









