பிரிவினைகளைச் சாடுகிற படைப்பு..!
ஒரு கற்பனையான கதைக்களம். அதில் இரண்டு பிரிவாக நிற்கிற மனிதர்கள். அவர்களுக்கு இடையே நிலவுகிற பேதங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் பகை. இவற்றைக் கொண்டு சாதிரீதியான பிரிவினைகளைச் சாடுகிற ஒரு படைப்பைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று களமிறங்கியிருக்கிறது இயக்குனர் விஷால் வெங்கட் தலைமையிலான ‘பாம்’ படக்குழு.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது இந்த ‘பாம்’?

வேறுபாடுகளை உடைத்தெறிவோம்!
ஒரு ஊரில் இரண்டு பிரிவுகளாக மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். ‘உன் சாமி பெரியதா, என் சாமி பெரியதா’ என்ற கேள்வி அவர்களைப் பிடித்தாட்டுகிறது. ‘நீ தாழ்ந்தவன்’ என்று ஒரு பிரிவினர் குரல் எழுப்ப, ‘நீ உயர்ந்தவனா’ என்று எதிர்க்குரல் எழுப்புகிறது இன்னொரு தரப்பு.
இந்த மோதலைப் பற்றவைத்துப் பெரிதாக்கிச் சிலர் குளிர் காய்கின்றனர். அதன் வழியே ஆதாயம் தேடுகின்றனர்.
அதனை நிறுத்த முயல்கிறார் ஒரு மனிதர். மது போதையினால் அவர் ஒருநாள் மரணமடைகிறார். ஆனால், ஊர் மக்கள் ஒன்றிணைந்து வளமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்கிற அவரது ஆசை மரணிக்கவில்லை.
அது, பிரிந்து கிடக்கும் ஊர் மக்களை ஓரிடத்தில் திரளச் செய்கிறது. ‘நீ தாழ்ந்தவன்’ என்று சொன்ன மனிதனை, அவர்களில் சிலர் கையெடுத்து வணங்கச் செய்கிறது.
அந்த அதிசயம் தொடர்ந்ததா, அதன்பிறகு என்னவானது? அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக வாழ வழி பிறந்ததா என்று சொல்கிறது ‘பாம்’ படத்தின் மீதி.
’வேறுபாடுகளை உடைத்தெறிவோம்’ என்பதுவே இக்கதையின் மைய இழை.
அதற்கு இடையூறாகப் பக்தி இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகிறது இப்படம். கதையில் நிகழும் அதிசயம் எப்படி நிகழ்ந்தது, அதன் பின்னணி என்று சொல்கிறது.
ஆனாலும், நாயக பாத்திரம் சிறு வயதில் ‘அனாதாரவாக’ நிற்கக் காரணமான உண்மை சில ஷாட்களாக படத்தில் வந்து போகிறது. அது குறித்த விளக்கம் இல்லை. போலவே, கிளைமேக்ஸில் நிகழ்கிற பேரதிசயம் குறித்த விளக்கமும் தெளிவுறச் சொல்லப்படவில்லை.
அது போன்ற சில விஷயங்களை, லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளத் தயாராகிவிட்டால், ‘பாம்’ படம் சிரிக்கவும் சிந்திக்கவும் தகுந்த படைப்பாகத் தென்படும்.

சிறப்பான படத்தொகுப்பு!
நாயகன் அர்ஜுன் தாஸ், இதில் அமைதியான, பயம் நிறைந்த, சுதந்திரம் குறித்த ஏக்கம் கொண்ட நபராக வருகிறார். படம் முழுக்க ஒரு பாத்திரமாக மிளிர்கிறார்.
ஒரு காட்சியில் சாமியாடியவாறே ‘லைஃப் டைம் செட்டில்மெண்ட்றா’ என்று அலறுகிறார். உரத்து ஒலிக்கும் அவரது குரல் அடங்கியபிறகே, அது ‘காமெடி’ என பிடிபடுகிறது.
நாயகி சிவாத்மிகா ராஜசேகர் ஓரளவுக்கு முக்கியத்துவம் உள்ள நாயகி பாத்திரத்தைப் பெற்றிருக்கிறார். அதன் வழியே ‘தனித்துவமாக’த் தெரிகிறார்.
பாலசரவணன் – பிரியா வெங்கட் வருகிற இடங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன.
ஊர்காரர்களாக வருகிற சிங்கம்புலி, டிஎஸ்கே, ’விலங்கு’ ரவி, கொளப்புல்லி லீலா மற்றும் எம்.எல்.ஏவாக வருகிற நாசர், ஆட்சியராக வருகிற அபிராமி எனச் சுமார் இரண்டு டஜன் பேர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
இயக்குனர் விஷால் வெங்கட் மனதில் வடித்த கற்பனை கிராமத்திற்கு யதார்த்தத்திற்கு நெருக்கமானதொரு வடிவத்தைத் தர மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குனர் மனோஜ் குமார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பி.எம். காட்சிகளின் தன்மை சரிவர ரசிகர்களிடம் பதியுமாறு தனது பணியை மேற்கொண்டிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. மிகச்சிரத்தையாக இப்படத்தைத் தொகுத்திருக்கிறார். ரசிகர்களுக்கு ஒரு பிரேம் கூட போரடித்துவிடக் கூடாது என்பதோடு கதை சொல்லலில் பிசிறு நேர்ந்துவிடக் கூடாது என்றும் போராடியிருக்கிறார்.

இவர்களோடு ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட பல அம்சங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றனர் தொழில்நுட்பக் கலைஞர்கள்.
டி.இமான் இசையில் பாடல்கள் எளிதாக மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. அவற்றைவிடப் பன்மடங்கு உழைப்பைப் பின்னணி இசையில் அவர் வெளிக்காட்டியிருக்கிறார். அதுவே நம்மைப் படத்தோடு ஒன்ற வைக்கிறது.
மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரிசன் ஆகியோர் உடன் இணைந்து இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். மூவரது சிந்தனையும் ஒன்றிணைந்து, முடிந்தவரை இக்கதை சொல்லலில் இருக்கிற குறைகளைக் களைந்திருக்கிறது.
மகிழ்நன் பி.எம். எழுதியிருக்கும் வசனங்கள், ‘ஷார்ப் பஞ்ச்’ ஆக இல்லை; அதேநேரத்தில், அவை சட்டென்று மனதைத் தொடுகிற எளிமையோடு இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மக்கள் கையிலிருக்கும் கயிறுகளை அறுத்துப் போடுவது, சக மனிதன் மீதான அன்பே உயிர்சக்தியாக ஒளிர்வது என்பது போன்றவற்றைக் காட்டுகிறபோது, சமத்துவமிக்க பூமியை உருவாக்குவதில் இயக்குனருக்கு இருக்கிற பெருவிருப்பம் தென்படுகிறது.
இது போன்றதொரு கருத்து கொண்ட படத்தை இரண்டாவது படைப்பாகத் தர முனைவது சாதாரண விஷயமல்ல. எத்தனை வணிகம் சார்ந்த சமரசங்கள் இருப்பினும் அப்படியொரு முயற்சியில் இறங்குவதே ஒரு வெற்றி தான்.
அந்த வகையில், ‘பாம்’ படக்குழுவுக்கு நிறைய வெற்றிகள் அடுத்தடுத்து கிடைக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்..!