இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி உடல் நலக் குறைவு காரணமாக ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ஏர்போர்ட் மூர்த்தி பதில் தாக்குதல் நடத்தினார். போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.
விசிக தலைவர் திருமாவளவன் மீது சமூக வலைதளங்களில் ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளார்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, “விசிகவைச் சேர்ந்த கூலிப்படையினர் 8 பேர் திருமாவளவன் தூண்டுதலின் பேரில் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். திருமாவளவனின் பட்டியலின சமூக விரோதப் போக்கை நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என போலீஸில் இரு முறை புகார் அளித்தும் நிலைமை சரியில்லை… நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று போலீசார் கூறிவிட்டனர்” என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிக சார்பில் திலீபன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், பாக்கெட் கத்தியால் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கியதில் காயங்களுடன் விசிகவைச் சேர்ந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஏர்போர்ட் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று இரவு11.30 மணியளவில் அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்தசூழலில் ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (செப்டம்பர் 8) தனது எக்ஸ் பக்கத்தில், “புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை. மறைந்த திமுக தலைவர் கலைஞர் 2006 – 2011 ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் ஸ்டாலின்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.