ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: எகிறி அடிக்க எடப்பாடி ரெடி! நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக பாஜக- ஜாலி மோடில் ‘செங்ஸ்’ + அண்ணாமலை

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ‘என்னமோ போடா மாதவா’ என்ற டயலாக்கை சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

எந்த கட்சி விகாரம்யா இப்படி சலிப்பாக போகுது?

ADVERTISEMENT

எல்லாம் செங்கோட்டையன் சேப்டர்தான்.. அங்கிட்டு எடப்பாடி பழனிசாமி, ‘என்னதான் நடக்கும்.. நடக்கட்டுமே’ என்கிறார்.. இங்கிட்டு பாஜக சீனியர்களே, “எதுக்குதான் எங்களுக்குன்னே இப்படி எல்லாம் நடக்குதோ’ என ரொம்பவே நொந்து போய் பேசுகின்றனர்.

சரி முதல்ல எடப்பாடி பழனிசாமி என்ன சொல்றார்னு சொல்லுமய்யா..

ADVERTISEMENT

செங்கோட்டையன் மவுனம் கலைத்து பேட்டி தந்த போதும் சரி.. டெல்லி போய் அமித்ஷாவை சந்தித்ததாக பேட்டி தந்த போதும் சரி.. எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் ரொம்பவே ஸ்டிராங்காகவே இருக்கிறார்..

“செங்கோட்டையன் மவுனம் கலைத்த பின்னர், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்துக்கு முன்பைவிட மிக அதிகமான எண்ணிக்கையில் அதிமுகவினர் திரளுகின்றனர்.. இதனால் இபிஎஸ் எந்த ஒரு அப்செட்டும் இல்லாமல் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்” என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

ADVERTISEMENT

அதேபோல, தமக்கு நெருக்கமான சகாக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தின் நிலைமையை பாஜக மேலிடம் சரியாகவே புரிஞ்சுக்கல.. தப்பாவே புரிஞ்சு வெச்சுருக்கு.. இங்க திமுக என்பது தலைவர்களை சார்ந்து இருக்கக் கூடிய கட்சி.. நாம அப்படி இல்லை.. தொண்டர்களை சார்ந்திருக்கக் கூடிய கட்சி.. இங்கே தொண்டர்கள் எடுக்கிறதுதான் முடிவு.. இதுக்கு ஏகப்பட்ட வரலாறு இருக்கு..

தலைவர் (எம்ஜிஆர்) மறைந்தப்ப ஜெ., ஜா அணி என 2 ஆக கட்சி பிளவுபட்டுச்சு.. தொண்டர்கள், தலைவர் மனைவியாக இருந்தாலும் கூட ஜானகி அம்மாளை ஏற்கலையே.. அன்றைக்கு அம்மாவையே தலைவராக ஏத்துகிட்டாங்க (ஜெயலலிதாவை)..

அவ்வளவு ஏன்? நாம முதல்வரானப்ப, ஓபிஎஸ்ஸை இறக்கிவிட்டாங்க.. அவரும் குருமூர்த்தி சொல்றதை எல்லாம் நம்பி தர்மயுத்தம் நடத்திப் பார்த்தாரு.. ஆளுநர் மூலமாக நம்ம ஆட்சியையே கவிழ்க்க நினைச்சு மெஜாரிட்டியை நிரூபிக்க சொன்னாங்க.. அவங்க நினைச்சது எதுவுமே நடக்கலையே.. தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒரு முடிவோட நம்ம பக்கமே நிற்கிறாங்க..

டிடிவி தினகரன் கூடவும் எம்.எல்.ஏ.க்கள் போனாங்க.. ஆனா பை எலக்‌ஷன்ல என்னாச்சு? நம்ம தலைமையில் தொண்டர்கள் வேர்வை சிந்தி உழைச்சு ஜெயிச்சோம்.. நாம ஆட்சியில நீடிக்கவே முடியாது. .கவிழ்த்துடலாம்னு நினைச்சாங்க.. கனவும் கண்டாங்க.. ஒன்னும் நடக்கலை.. ஏன்னா இது தொண்டர்களை சார்ந்திருக்கிற கட்சி.. நம்ம தொண்டர்கள் ஒரு தலைமையை ஏற்றுக் கொண்டால் உயிரை கொடுத்து அரவணைச்சு பக்கபலமாக நிப்பாங்க..

இந்த வரலாறெல்லாம் தெரியாம, டெல்லி பாஜக மேலிடம் தமிழக அரசியலை தப்பா புரிஞ்சுகிட்டு என்னமோ செஞ்சு பார்க்குது.. செஞ்சுதான் பார்க்கட்டுமே..

நாம பாஜக கூட்டணியில்தான இருந்தோம். . அண்ணாமலைதான் அம்மாவை (ஜெயலலிதா) பற்றி தப்பா பேசுனாரு.. தொண்டர்கள் அதை சகிச்சுக்கலை.. கூட்டணியை விட்டு வெளியேறினோம்.. தொண்டர்கள் சந்தோஷப்பட்டாங்க.. அதனால நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அவங்கதான் ஏதாவது ஒரு கணக்கு போட்டுகிட்டு செஞ்சு பார்க்கிறாங்க..

இந்த முறை கூட்டணி வைச்சப்பவும், முதல்வர் வேட்பாளர் யாருன்னு சொல்லலை; கூட்டணி ஆட்சிதான் அமைப்போம்னு பேசுனாங்க.. நாம தெளிவாக சொன்னோம்..நான்தான் முதல்வர் வேட்பாளர்; தனித்து அதிமுக ஆட்சிதான்னு திட்டவட்டமாக சொன்னோம்.. அவங்களால பேச முடியலையே..

பாஜகவைப் பொறுத்தவரைக்கும், அப்படி இப்படி செஞ்சு கூட்டணி ஆட்சி அமைக்கலாம்; 2029-ல் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டுல இருந்து அதிகமாக சீட் ஜெயிக்கலாம்னு நினைக்குது.. நிர்மலா சீதாராமனும் இந்த கணக்குலதான் சில விஷயங்களை (செங்கோட்டையன் கலகம்) செஞ்சு பார்க்கிறாரு.. அவங்க என்னமோ நினைக்கட்டும்.. என்னமோ செய்யட்டும்.. நாம நம்ம லைனில் ஸ்டிராங்காவே நிப்போம்.. அதுக்குப் பிறகு என்ன நடந்தாலும் நடக்கட்டுமே” என விலாவாரியாகவே மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுபற்றி நாம் அதிமுக வட்டாரங்களில் பேசிய போது, “செங்கோட்டையன் பக்கம் எந்த அதிமுக தலைவர்களும் போகமாட்டாங்க.. போகலை.. ஏன்னா எடப்பாடி பக்கம் அதிமுக தொண்டர்கள் நிற்கிறாங்க.. இப்ப ஒவ்வொரு நாளும் எடப்பாடி மீட்டிங்குக்கு கூடுற கூட்டத்தைப் பாருங்க.. செங்கோட்டையன் தரப்பில் இருந்து விடாம போனடிச்சாலும் மாஜி அமைச்சர்கள் யாருமே போனை அட்டெண்ட் செய்யறதும் இல்லை.. நிர்மலா சீதாராமனுக்கு தப்பா சொல்லி கொடுத்து இப்படி எல்லாம் செஞ்சு பார்க்குறாங்க.. ஒன்னுமே நடக்காமத்தான் போகும்” என்கின்றனர்.

ஆமா.. இவ்வளவு களேபரத்துக்குப் பின்னரும் ஏன் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்காம இருக்கிறார் இபிஎஸ்?

இந்த கேள்வி உமக்கு மட்டுமல்ல.. நமக்கும் இருக்கிறது.. எல்லோருக்கும் இருக்கிறது.. ஆனால் எடப்பாடியோ, “அமித்ஷாவை சந்திச்சேன் என செங்கோட்டையன் பிரஸ் மீட்டுல சொல்லி இருக்கிறாரு.. இதை டெல்லி பாஜக மேலிடம் ஆமா.. சந்திச்சாருன்னும் சொல்லலை.. சந்திக்கவே இல்லைன்னும் சொல்லலை..அதனால பொறுத்திருந்து பார்ப்போம்” என சீனியர்களிடம் சொல்லி இருக்கிறாராம். அதே கையோடு, தம்பிதுரை மூலமாக டெல்லி பாஜக மேலிடத்தை தொடர்பு கொண்டு, இதுபற்றி பேசவும் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன், “இப்படி எல்லாம் நடக்கிறது.. என்னதான் நீங்க நினைக்கிறீங்க.. அதை வெளிப்படையாக சொல்லுங்கன்னு கேட்கனும் என தம்பிதுரையிடம் எடப்பாடி சொல்லி இருக்கிறாராம். தம்பிதுரையிடம் இருந்து வரும் பதிலை வைத்து செங்கோட்டையனை நீக்குவது பற்றி இபிஎஸ் முடிவு எடுப்பாராம்.

அதுசரி.. எடப்பாடி பழனிசாமி, ‘என்னதான் நடந்தாலும் கட்சி நம்மகிட்டதான்.. தொண்டர்கள் நம்மகிட்டதான்’ என்பதில் உறுதியாகத்தான் இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவின் சீனியர் தலைவர்கள்.

செங்கோட்டையன் என்ன சொல்கிறாராம்?

அதுவா. ரொம்ப பெரிய பெரிய கனவுகளுடன் பேசுகிறாராம் செங்கோட்டையன். தம்மை சந்திக்கும் கோபிச்செட்டிபாளையம் ஆதரவாளர்களிடம் பேசும் போது, “கட்சிக்கு நாமதான் பொதுச்செயலாளர்.. நாமதான் முதல்வர் வேட்பாளர்.. சின்னம்மா, டிடிவி, ஓபிஎஸ் எல்லாமே ஓகேன்னுதான் இருக்காங்க.. கட்சியோட பலமே கொங்கு பெல்ட்தான்.. அதனால பாஜகவும் நம்ம பக்கம்தான்..

என்கிட்ட எல்லோரும்தான் பேசிகிட்டு இருக்காங்க.. எடப்பாடி பக்கத்துல இருக்கிற வேலுமணியும் பேசுறாரு.. சிவி சண்முகமும் பேசுறாரு.. இன்னும் நிறைய பேரு நம்ம கூட வந்துடுவாங்க.. நம்பிக்கையா இருங்க.. டெல்லி கை கொடுக்கும்” என கூலாக சொல்கிறாராம்.

அதெல்லாம் சரி.. தமிழக பாஜக தலைவர்கள் என்ன நினைக்கிறாங்கய்யா?

அதுதான் ஆச்சரியமா இருக்கு.. டெல்லி தலைமை இப்படி நிர்மலா சீதாராமன் மூலமாக செங்கோட்டையனை இயக்குவதை பார்த்து ரொம்பவே வேதனையில் இருக்காங்கப்பா..

நிஜமாத்தான் சொல்றீங்களா?

ஆமாம்பா.. நாமும் பாஜகவின் மிக மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம்.. அவரும் கூட, “பிரதர், தமிழகத்தோட அரசியலையே புரிஞ்சுக்காம டெல்லியில் இருக்காங்க.. எங்க அமித்ஷாஜி எத்தனையோ ஸ்டேட்லய எத்தனையோ வியூகம் வகுத்து ஜெயிச்சு காட்டி இருக்கிறாருதான்.. ஆனால் இந்த ஸ்டேட்.. ஐ மீன் நம்ம தமிழ்நாடு.. அப்படி இல்லைங்கிறது இன்னமும் அவங்களுக்கு புரியலை.. நிர்மலாஜி மாதிரி ஆளுங்க ரொம்பவே தப்பா சொல்லி வைச்சுட்டாங்க..

ஸீ..ரொம்ப பேசிக்கா ஒன்னை தெரிஞ்சுக்கோங்க.. இப்ப இபிஎஸ், தமிழ்நாடு முழுவதும் டூர் போயிட்டு இருக்கார் இல்லையா? டூரோட ரிசல்ட் என்னா? கொஞ்சம் அசந்து இருக்கிற அண்ணா திமுககாரங்க அத்தனை பேரையும் உசுப்பிவிட்டு களத்துல இறக்கிவிட்டிருக்காரு இபிஎஸ்.. அவங்களும் சீரியசாக களத்துல இறங்கி வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க.. எவ்வளவு கூட்டம் திரளுதுன்னு பார்க்கிறீங்கதானே பிரதர்..

இப்படி இருக்கறப்போ, எடப்பாடிக்கு எதிராக ஒரு வேலை செஞ்சா எப்படி ஒர்க் அவுட் ஆகும்? பேக் பயர் ஆகிடாதா? கிரவுண்ட் ரியாலிட்டியையே டெல்லி ஹை கமாண்ட் தெரிஞ்சுக்கலை.. புரிஞ்சுக்கலை” என விரக்தியை கொட்டுகிறார்.

இன்னும் சில சீனியர்களோ, “என்னங்க இது அநியாயமா இருக்கு? அண்ணா திமுக, நாளைக்கு நம்ம கூட்டணியை விட்டு போயிடுச்சுன்னா எப்படி ஜெயிக்க முடியும்? ‘லாபம்’ யாருக்கு? ‘நட்டம்’ யாருக்குனு வேணாமா?” என வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்களாம்.

ஆனால், “இத்தனை களேபரங்களிலும் கலகங்களிலும் ஒரே ஒருவர்தான் ஓவர் டோஸ் மகிழ்ச்சியில் வலம் வருகிறார்.. டிடிவி தினகரன், செங்கோட்டையன் பேசுறதை எல்லாம் பார்த்தாலே தெரியுமே” என கமலாலய வட்டாரங்கள், அண்ணாமலையை கை நீட்டுவதாக சொல்லிவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share