ஆர்.பி. உதயகுமாருக்கு பதிலடி : முதலில் ஆவேசம்… பின்னர் மன்னிப்பு – சில நிமிடங்களில் மனம் மாறிய செங்கோட்டையன்

Published On:

| By christopher

sengottaiyan change his words against rb udhayakumar

ஆர்.பி. உதயகுமார் தாயார் மறைவு குறித்து முதலில் இன்று (செப்டம்பர் 10) ஆவேசமாக பேசிய செங்கோட்டையன், அடுத்த சில நிமிடங்களில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் தற்போது அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ADVERTISEMENT

அதற்காக அவரின் கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து பேசினார் செங்கோட்டையன்.

அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளரில் இருந்து மாற்றினால், மீண்டும் என்.டி.ஏ. கூட்டணியில் இணைவோம்” எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், ”அதிமுக ஒன்றிணைக்கும் விவகாரத்தில் நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை” என்பதையும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

வயிற்றெரிச்சல் மனிதர்கள்!

அதில், “அதிமுக – பாஜக கூட்டணியில் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்திவிட முடியாதா என சிலர் நினைக்கிறார்கள். ஆளுகிற கட்சி ஒருபுறம் என்றால், அதற்கு இரையாகி வயிற்றெரிச்சலாலும் இயலாமையாலும் பொறாமையால் சிலர் தங்களை தாங்களே தடம் மாற்றிக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதிமுக ஒற்றுமை எனும் பெயரை வைத்துக்கொண்டு, விண்ணளவு உயர்ந்து கொண்டிருக்கும் கட்சியின் செல்வாக்கிற்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்திவிடலாம் என கனவு காணும் வயிற்றெரிச்சல் கொண்ட மனிதர்களுக்கு அம்மாவின் ஆன்மாவும், தமிழ்நாட்டு மக்களும் தோல்வியைத் தான் தருவார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணச் செய்தியை மடைமாற்றம் செய்வதற்கு, வயிற்றெரிச்சல் மனிதர்கள் எல்லாம் இவர் அங்கே சென்றார், அவர் இவரைச் சந்தித்தார், எதற்கு சந்தித்தார் என பக்கம் பக்கமாக செய்திகள் வருகிறது. அவர்தான் (அமித்ஷா) இங்கேயே வந்து எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி அமைய பாஜக – அதிமுக கூட்டணி என வெற்றி பயணத்தில் நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம்.

மூத்தவர்கள் முன்னோர்களே இப்படி செய்தால், எளியவர்களும் சாமானியர்களும் என்ன செய்யமுடியும். அதிமுக மட்டுமே அனைவருக்குமான இயக்கம். அப்படியான இந்த இயக்கத்தை காக்க, தன்னை அர்ப்பணித்து உழைத்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி வாழ்த்து பாடாவிட்டாலும், அவரது உறுதியை அசைத்துபார்க்கலாம் என கனவு கண்டால் அதில் நீங்கள் தோல்வியைத் தான் சந்திப்பீர்கள்.

2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி. இதற்கு எதிராக எத்தனை சக்திகள் தோன்றினாலும் அது தோல்வியில் தான் முடியும். அவரை மாற்ற வேண்டும் இவரை மாற்ற வேண்டும் என்று சொல்பவர்களை எல்லாம் மாற்றிவிட்டு, எடப்பாடி பழனிசாமி தான் ஒரே நம்பிக்கை என காலமும் மக்களும் பதில் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையன் இருவேறு பேச்சு!

ஆர்.பி. உதயகுமாரின் பேச்சு தொடர்பாக ஈரோட்டில் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அவங்க அம்மா அங்க செத்து கிடக்கிறார்கள். முதலில் அதை போய் பார்க்கச் சொல்லுங்கள்” என ஆவேசமாக பதிலளித்து விட்டு சென்றுவிட்டார்.

பின்னர் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தித்த செங்கோட்டையன், “ஆர்.பி உதயகுமார் வீடியோ தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். மன்னிக்கவும். அவர் என்னோடு நன்றாக பழகக்கூடியவர், பண்பாளர். அவரது தாயாரை இழந்துள்ள இந்த சூழ்நிலையில் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடியவில்லை. அவரது தாயார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். என்னை பொறுத்தவரை அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டால் காலம் தான் பதில் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share