டிஜிட்டல் திண்ணை:அவசர செயற்குழுவின் அஜெண்டா…   திருமா, கம்யூனிஸ்டுகளின் திசை… எடப்பாடி போட்ட போடு!

Published On:

| By Aara

AIADMK urgent Executive Council August 16

வைஃபை ஆன் செய்ததும் அதிமுக ஆகஸ்ட் 16ஆம் தேதி நடத்தும் அவசர செயற்குழு பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன அவற்றை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“ஆகஸ்ட் 16ஆம் தேதி அதாவது நாளை அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையிலே நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் இணைப்பது தொடர்பாக விவாதங்கள் எழும் என அதிமுகவின் பல்வேறு முகாம்களில் பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பன்னீர்செல்வம் தரப்பில் இருந்தே தற்போது அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், காமராஜ், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களிடம் அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைவதன் அவசியம் குறித்து பேசுமாறு லியுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான்… ஒரு சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில மாவட்ட செயலாளர்களிடமும் உரையாடி இருக்கிறார்.

அப்போது அவர், ‘அவசர செயற்குழுவில் ஊடகங்களில் வருவதைப் போல பன்னீர், சசிகலா பற்றிய எந்த விவாதமும் இருக்காது. அதற்கான அவசியம் இல்லை. இவர்கள் விஷயத்தில் நாம் ஏற்கனவே என்ன முடிவு எடுத்திருக்கிறோமோ அதில் உறுதியாக இருக்கிறோம். எனவே பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து தனிப்பட்ட முறையில் நமது நிர்வாகிகளிடம் யாராவது பேசினாலும் அதை பொருட்படுத்த வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக பெரிய கூட்டணி அமைக்க தயாராகிறது. அதற்கான வியூகங்கள் பற்றி நாம் தொடர்ந்து விவாதிக்க வேண்டுமே தவிர பின்னோக்கிச் சென்று அவர்களைப் பற்றி பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Image

மேலும் திமுக கூட்டணியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் பெரிய பிரச்சனைகள் வரும் என்றும் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

‘திமுக கூட்டணியில் இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு இடங்களில் போட்டியிடுகிறதோ அவ்வளவு இடங்களுக்குக் குறையாமல் தங்களுக்கும் இடம் வேண்டும் என்று  கேட்பார்கள். அதற்கான ஆலோசனைகளை அவர்கள் நடத்தி வருகிறார்கள், மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில் விசிகவுக்கு ஏற்கனவே போட்டியிட்ட இடங்கள் போதாது. மக்களவைத் தேர்தல் போல விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதனால், திமுக தலைமைக்கும் திருமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்த வரை அவர்களுக்கு அரசு ஊழியர் சங்கங்களின் ஆதரவும் சந்தாவும் மிக முக்கியம். கம்யூனிஸ்ட் கட்சி நடத்துவதற்கே கட்சியின் அரசு ஊழியர் சங்க சந்தா தொகைதான் பெரும் உதவியாக இருக்கிறது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அரசு ஊழியர் சங்கங்கள் மீண்டும் திமுக கூட்டணியில் இடம் பெறுவதை விரும்பவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களுக்காக ஸ்டாலின் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.  இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவுக்கு எவ்வாறு ஓட்டு கேட்பது என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசு ஊழியர் சங்கத்தினர் தங்கள் மாநில தலைமையை கேட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் தங்களால் தேர்தல் பணி செய்ய முடியாது என்ற நிலையிலும் அவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கூட்டணியில் நீடிக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

திமுக கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை எனறு வெளியே தோன்றினாலும், உள்ளுக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்ச கூட்டணியோடு திமுக அதிகமான இடங்களில் போட்டியிடுவதையே விரும்புகிறார். இதுவும் அங்கே பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.

இதெல்லாம் நமக்கு நிச்சயமாக சாதகமாக மாறும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை நாம் எவ்வாறு புறக்கணித்தோமோ, அதே போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் பாஜகவை புறக்கணிப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அப்படிப்பட்ட நிலையில் இன்னும் மாதங்களுக்குப் பிறகு கூட்டணி காட்சிகள் மாறும். அதிமுக பக்கம் கூட்டணி கட்சிகள் வந்து சேரும். அவற்றையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட நிலையில் ஓபிஎஸ், சசிகலா என்று அதிமுக விவகாரத்தில் முடிந்து போன பிரச்சனைகளை யாரும் மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வளர்ச்சியை பாருங்கள்’ என்று தனக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்கள், தலைமைச் கழக நிர்வாகிகளிடம் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அதிமுக செயற்குழுவில் புயலைக் கிளப்ப வேண்டும் என்ற பன்னீர்செல்வம் தரப்பின் கடைசி கட்ட முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிமுக உடைந்து கிடக்கிறது என பொதுமக்கள் மத்தியில் இருக்கும் பிம்பத்தை மாற்றாமல் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் அது உதவாது என்பது பன்னீர்செல்வம் தரப்பின் வாதம்.

இத்தகைய சூழ்நிலையில்தான் அதிமுகவின் அவசர செயற்குழு ஆகஸ்ட் 16 கூடுகிறது” என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலை நிறுத்தம் கூடாது: என்எல்சி தொழிற்சங்கத்துக்கு  உத்தரவு!

பார்வை குறைபாடு – பேருந்து பயண அட்டை பெற சிறப்பு முகாம்கள்: எங்கெங்கு, எந்த நாட்களில்?

நீதிபதி ஓகா போட்ட கிடுக்கிப்பிடி.., சிக்கித் திணறும் ED… செந்தில்பாலாஜிக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share