ஆகஸ்ட் 17-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பாக நேற்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்எல்சி தரப்பில், “இந்த விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்புக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையும் நிலுவையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
என்எல்சி தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், “20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் இதுவரையிலும் நிறைவேற்றவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் நிர்வாகம் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது.
சுமார் 13,000 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தம் செய்வது என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. இந்த போராட்டத்தில் ஈடுபடும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “இருதரப்பு வாதங்களும் முடிவடையாததால் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தொழிற்சங்கத்தினர் எந்த வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது” என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெற்றிலைத் துவையல்!
திரம்பு அரசியல் படுகொலை முயற்சிக்கான அவசியம் என்ன? பகுதி 3
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : மகனை தொடர்ந்து தந்தைக்கும் போலீஸ் காவல்!
டாப் 10 செய்திகள் : மோடி, ஸ்டாலின் கொடி ஏற்றுதல் முதல் தங்கலான் ரிலீஸ் வரை!