அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவுபெற்ற நிலையில்… கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் ஒரே நாளில் அதாவது இன்று ஆகஸ்டு 14 ஆம் தேதிக்கு இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட தகவல் நேற்று இரவு வெளியானதும், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்தார்கள்.
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், திடீரென அந்த வழக்கை மீண்டும் இன்று (ஆகஸ்டு 14) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது ஏன்? அமலாக்கத்துறையிடம் கேள்வி கேட்டது ஏன்? மீண்டும் வழக்கை ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது ஏன்?
இந்த கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் 12, 14 தேதிகளில் நடந்த விசாரணைக் காட்சிகளே பதில் சொல்கின்றன.
ஆகஸ்ட் 12 நடைபெற்ற விசாரணையில், “செந்தில்பாலாஜி இப்போது அதிகாரத்தில் இல்லை. அவரால் வழக்குக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. தவிர அவர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான அபய் ஓகா,
“செந்தில்பாலாஜி மீது சென்னையில் மத்திய குற்றப் பிரிவு பதிவு செய்த 3 வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் எப்போது தொடங்கி நடைபெறும்?” என்று கேட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், “3 மாதங்களில் விசாரணை முடிவடையும். ஆனால் தமிழ்நாடு அரசு வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறது” என்று துஷார் மேத்தா கூறினார்.
அப்போது நீதிபதி ஓகா, “அந்த மூன்றில் ஒரு வழக்கில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் விசாரிக்கப்பட வேண்டும். அந்த வழக்கு விசாரணை முடியும் வரை இவர் சிறையிலேயே இருக்க வேண்டுமா?’ என்றார்.
மேலும் சில கேள்விகளையும் கேட்டார் நீதிபதி. ஆனால் அமலாக்கத்துறை சார்பில் அதற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.
இடையில், “வேண்டுமானால் அந்த வழக்கை விட்டுவிடுவோம்” என்றும் அமலாக்கத்துறை தரப்பில் பதிலளித்ததாக தெரிகிறது.
மேலும் அமலாக்கத்துறை தரப்பில் வேறு வேறு வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் வாதிட்டு வருவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பிறகு வேறு வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தனர்.
நீதிபதி அபய் ஓகாவுக்கு, ‘வேண்டுமானால் அந்த வழக்கை விட்டுவிடுவோம்’ என்ற ரீதியில் அமலாகக்த்துறை தரப்பில் வாதிட்டது நெருடலாக இருந்தது.
அதனால்தான் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில், உடனே இந்த வழக்கை ஆகஸ்டு 14 ஆம் தேதிக்கு(இன்று) பட்டியலிட்டார்.
நீதிபதியின் இந்த நடவடிக்கையை செந்தில்பாலாஜி தரப்பினரும் எதிர்பார்க்கவில்லை, அமலாக்கத்துறையினரும் எதிர்பார்க்கவில்லை.
நீதிபதி அபய் ஓகா இன்று (ஆகஸ்டு 14) வழக்கை எடுத்து அன்று கேட்ட அதே கேள்வியை மீண்டும் அமலாக்கத்துறையினரிடம் கேட்டு தெளிவான பதிலை எதிர்பார்த்தார்.
அதாவது, “செந்தில்பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்த 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை அவர் சிறையில் இருக்க வேண்டுமா? அந்த வழக்குகளில் ஒன்றில் 2000 பேருக்கு மேல் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதே… அந்த வழக்கை சேர்த்துதான் சொல்கிறீர்களா அல்லது அந்த வழக்கை விட்டுவிடப் போகிறீர்களா?” என்பதுதான் இன்று மீண்டும் நீதிபதி அபய் ஓகா கேட்ட கேள்வி.
மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே அது இதுதான்…
செந்தில்பாலாஜி மீது மத்திய குற்றப் பிரிவு மூன்று வழக்குகளைப் பதிவு செய்தது. அவர் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது ஜூனியர் பொறியாளர்கள் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக ஒரு வழக்கு, டிரைவர் பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்று நியமனம் செய்ததாக வழக்கு, கண்டக்டர் பணிக்காக லஞ்சம் பெற்றதாக ஒரு வழக்கு என 3 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் முதல் வழக்கு ஜூனியர் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்று நியமனம் செய்ததான வழக்கு. இதில் சுமார் 65 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார் என்பது அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.
இரண்டாவதாக, மூன்றாவதாக போட்ட வழக்குகளில் மொத்தம் சுமார் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வழக்கு.
இந்த முதல் வழக்கு தொடர்பான ஆவணங்கள்தான் பென் டிரைவ்களில் இருப்பதாக அமலாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றத்தில் சொல்லி வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி ராம சுப்பிரமணியன், லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேரையும் வழக்கில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த மூன்று வழக்குகளின் விசாரணைதான் எப்போது முடியும் என்று ஜாமீன் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான அபய் ஓகா ஆகஸ்டு 12 ஆம் தேதியும், ஆகஸ்டு 14 ஆம் தேதியும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை ஏன் செந்தில்பாலாஜி சிறையில் இருக்க வேண்டும் என்று அவரது தரப்பினர் கேள்வி எழுப்பியதையும் அங்கீகரித்திருக்கிறார் நீதிபதி.
அதனால்தான், “இந்த மூன்று வழக்கு விசாரணையையும் முடியும் வரை செந்தில்பாலாஜி சிறையில் இருக்க வேண்டுமா? அமலாக்கத் துறை இந்த 3 வழக்குகளின் விசாரணையை நடத்தப் போகிறதா? அல்லது அந்த வழக்கை தவிர்க்கப் போகிறதா?’ என்று இன்றைக்கு மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி ஓகா.
இந்த கேள்விக்கு பதிலளிப்பதில் அமலாக்கத்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால்… முதல் வழக்கான ஜூனியர் பொறியாளர்களிடம் லஞ்சம் பெற்றதான வழக்கில்தான் 65 கோடி ரூபாய் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறை சொல்லும் எலக்ட்ரானிக்ஸ் எவிடென்ஸ் இந்த வழக்கு சம்பந்தப்பட்டதுதான். ஆனால் இவ்வழக்கை விசாரிக்க வேண்டுமென்றால் சுமார் 2 ஆயிரம் பேரை விசாரித்திட வேண்டும். அதுவரை செந்தில்பாலாஜியை சிறையில் வைத்திருக்க முடியாது. அதனால் ஜாமீன் கொடுக்க அமலாக்கத்துறை சம்மதித்தே ஆக வேண்டும்.
இன்னொரு கோணத்தில்…ஒரு வேளை இந்த வழக்கை தவிர்த்துவிட்டு பிற இரு வழக்குகளையும் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு வாய்ப்பு இல்லை.
ஏனென்றால் இந்த வழக்கை தவிர்த்தால் மீதியிருக்கிற இரு வழக்குகளில் அவர் வாங்கியதாக கூறப்படும் லஞ்சத் தொகை என்பது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு வரம்புக்குள் வராது. எனவே செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததே செல்லாது என்றாகிவிடும்.
எனவே முதல் வழக்கை அமலாக்கத்துறை நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படி நடத்தும் பட்சத்தில் அதற்கான விசாரணை காலம் மிக நீண்டதாகவே இருக்கும். எனவே அதுவரை செந்தில்பாலாஜியை சிறையில் வைத்திருக்க முடியாது.
எனவே இரு தலைக் கொள்ளி நிலையில் இப்போது இருக்கிறது அமலாக்கத்துறை. முதல் வழக்கை தவிர்த்தால் இத்தனை ஆண்டு காலமாக நடத்தியதெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கை என்பது உறுதியாகிவிடும். மேலும் செந்தில்பாலாஜி மீது பி.எம்.எல்.ஏ. பிரிவே பொருந்தாது.
ஒருவேளை அந்த முதல் வழக்கை அமலாக்கத்துறை நடத்துவதாக இருந்தால்… சுமார் 2 ஆயிரம் பேரை விசாரிக்கும் வரை செந்தில்பாலாஜியை சிறையில் வைத்திருக்க முடியாது. அவரை ஜாமீனில் விடுவித்தே ஆகவேண்டும்.
இப்படி ஒரு கிடுக்கிப் பிடி நிலையைதான் உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகாவின் கேள்வி அமலாக்கத்துறைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால்தான் எழுத்து ரீதியாக பதில் சொல்ல அவகாசம் கேட்டிருக்கிறார்கள். நீதிபதியும் 20 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
20 ஆம் தேதி இர்ண்டில் ஒன்று தெரிந்துவிடும். அமலாக்கத்துறை எந்த முடிவெடுத்தாலும் செந்தில்பாலாஜி வெளியே வந்தாக வேண்டும்!’
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘-வேந்தன்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி : குஷ்பு ராஜினாமா!
திராவிட சித்தாந்தம் நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது: ஆளுநர் ரவி