நடிகர் அஜித்குமார் ஜெயலலிதா மீது பெரும் மரியாதை கொண்டவர். அடிக்கடி அவரைச் சந்திப்பார் எனவும் தெரிவித்தார். நாங்களும் அஜித் மீது பெரும் மரியாதை கொண்டுள்ளோம் என அஜித் ரசிகர்களிடம் கலந்துரையாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவரது கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் களம் காண்கின்றனர்.
இதற்கிடையில், நடிகர் அஜித் “நான் எனது ரசிகர்களின் அன்பைச் சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன். அரசியலுக்கு வர மாட்டேன்” என்று பலமுறை தெரிவித்துள்ளார். தற்போது சினிமாவைப் போலவே கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் அஜித் ரசிகர்களின் வாக்குகளை குறிவைத்து அதிமுக செயல்படத் தொடங்கியுள்ளது. சென்னை, நாகர்கோவில் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அதிமுக தொண்டர்கள் அஜித்துடன் எடப்பாடி இருப்பது போன்ற புகைப்படத்தை எடப்பாடிக்கு வழங்கினர். இது குறித்த செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் பல்வேறு முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, செல்வபுரம் பகுதியில் நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கோவையில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மற்றவர்களிடமும் அதிமுகவிற்கு வாக்களிக்கச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் அஜித் ஜெயலலிதா மீது பெரும் மரியாதை கொண்டவர் எனவும், அடிக்கடி அவரைச் சந்திப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மறைந்தபோது கூட வெளிநாட்டில் இருந்து வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார் என்றும் குறிப்பிட்டார். அஜித் மீது எங்களுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு எனத் தெரிவித்த வேலுமணி, “நீங்கள் ஆதரவு கொடுத்திருப்பதற்கு நன்றி” என்றும் தெரிவித்தார்.
தமிழகத் தேர்தல் களத்தில் விஜய் வேட்பாளராக நிற்கும் போது, அஜித் ரசிகர்களின் வாக்குகளை குறிவைத்து அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அஜித் மனம் திறப்பாரா அல்லது அமைதி காப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
