கூச்சமே இல்லையா ஓபிஎஸ்.. பச்சோந்திக்கு ‘அம்மா’ எல்லாம் சும்மா தானே? – அதிமுக விமர்சனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ops

அதிமுகவில் மூன்று முறை முதல்வராகவும், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இன்று (பிப்ரவரி 27) முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் முற்றிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்தப் பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வானதை இந்தியத் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்த ஓபிஎஸ், பின்னர் அதனை ‘தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்றும் பெயர் மாற்றி அறிவித்தார்.

திமுகவில் இணைந்த சூழல்:

ADVERTISEMENT

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓபிஎஸ் உறுதியான முடிவு எடுக்கத் தயங்கியதால், அவரது ஆதரவாளர்கள் விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணையத் தொடங்கினர். இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்த நிலையில், “தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள அருமை அண்ணன் எடப்பாடி தயாரா?” என்று செய்தியாளர்கள் முன்னிலையில் ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

ஆனால், ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, இன்று ஓபிஎஸ் தனது மகன்கள் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோருடன் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அரசியலில் இன்று ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப் போக்கோடு நடந்து கொள்கின்ற எடப்பாடி பழனிசாமி, எந்தக் காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அதிமுகவிற்கு உருவாக்கியிருக்கிறார்” என்று விமர்சித்தார்.

அதிமுக ஐடி பிரிவின் கண்டனம்:

ஓபிஎஸ்-ன் இந்த முடிவிற்கு அதிமுக ஐடி பிரிவு சார்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில்,”கூச்சமே இல்லையா ஓபிஎஸ்?

‘ரோஸி டீக்கடை’ நடத்திக் கொண்டிருந்த உங்களை ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன்… முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்திடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அதிமுக தொண்டர்கள்.

ஆனால் நீங்களோ, உள்ளே இருந்துகொண்டே உடன்பிறப்பாகவே (உ.பி) இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதியின் வசனப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், உங்களை வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!

செய்த பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூடக் கட்ட முடியாத நிலைக்கு அதிமுக தொண்டர்கள் உங்களைத் தள்ளிவிட்டனர். பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்கள் நடத்திய நாடகமெல்லாம் அம்பலமானதும், வேறு வழியின்றி ‘ஓனர்’ வாசப்படிக்கே சென்றுவிட்டீர்களோ?

இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு ‘அம்மா’ எல்லாம் சும்மா தானே?! ‘உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க’ என வெட்கமே இல்லாமல் திரிய வாழ்த்துகள்! இந்த லட்சணத்தில் இதற்கு ‘தர்மயுத்தம் 1.0, 2.0’ என்று பெயர்கள் வேறா? உங்களை நம்பி ஏமாந்த அந்தச் சில தொண்டர்களின் பாவம் உங்கள் தலைமுறையைத் தொடரும்.

பி.கு: தயவுசெய்து ‘அம்மா’ புகைப்படத்தைத் துறந்துவிடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனைக் கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share