2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்திலிருந்தே தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை (ஆகஸ்ட் 10) கோவை வந்தார்.
நேற்று இரவு உடுமலை கிளம்பிய ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 11) காலை நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க நேதாஜி சாலையில் உள்ள நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார். வழியில் தொண்டர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் வாகனத்திலிருந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினார்.
விழாவில் சுமார் 19,000 பயனாளிகளுக்கான 1426.8 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். திருப்பூர் மாவட்டங்களுக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இந்த பகுதிக்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டலகாரர் என்று சொல்லிக் கொள்கிறார். உண்மையில் பழனிசாமி ஆட்சியை விட திராவிட மாடல் ஆட்சியில்தான் மேற்கு மண்டலத்தின் அனைத்து துறை வளர்ச்சிக்கும் அதிக திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல சாதனைகளை செய்வோம் என்றார்.
மேலும் அவர்,“எந்த தைரியத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இந்த பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது தெரியவில்லை. நிச்சயமாக அதிமுகவின் தேர்தல் தோல்வி இங்கிருந்து தான் தொடங்க போகிறது. ஏற்கனவே 2024 உள்ளாட்சி இடைத்தேர்தலில் இந்த மண்டலத்தில் இருந்துதான் அவர் தோல்வியை பார்த்தார். அதுவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.
ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் போய் பொய்களை கத்தி கத்தி உறக்க பேசினால் தனது அலங்கோல ஆட்சியை மக்கள் மறந்து விடுவார்கள் என்று பேசுகிறார். ஆனால் அந்த ஆசையில் மண் விழும் வகையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மக்களிடையே பெரிய ஹிட் ஆகி விட்டது.
அந்த வயிற்றெறிச்சலில்தான் திமுக அரசு மேலும் ஸ்கோர் பண்ணி விட கூடாது. மக்களுக்கு நன்மை நடந்து விட கூடாது என்று மக்கள் நல திட்டங்களுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் சென்றார். அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்க்க நீதிமன்றம் வருவது குற்றம் என்றதோடு நமது அரசுக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் 10 லட்சம் நன்கொடை கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தது. இது உங்களுக்கு அவமானமாக இல்லையா” என்று கேள்வி எழுப்பினார்.
“பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே பெஸ்ட் மாநிலம் தமிழ்நாடுதான் என்று அவர்கள் கூட்டணியில் ஒன்றிய அரசில் இருக்கும் பாஜக அரசே அறிக்கையை கொடுத்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக அவருக்கு அடிமேல் அடி விழுகிறது. இதனால் விரக்தியின் உச்சத்திற்ககே எதிர்க்கட்சி தலைவர் போய்விட்டார்.
அதனால் தான் முதலமைச்சர் என்ற மக்கள் அளித்த பொறுப்புக்கு கூட மரியாதை தராமல் அவர் என்னை தரம் தாழ்த்தி ஒருமையில் பேசுகிறார். அதுகுறித்தொல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. இன்னும் பேசுங்கள்.. இன்னும் இறங்கி பேசுங்கள். நாங்கள் அது குறித்து கவலை படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. உங்களுக்கு பதில்சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை. என்னை பொறுத்தவரை பேச்சை குறை.. செயலில் காட்டு என்பது தான்.
தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையார் என்று நினைத்து சவுண்டு விடுகிறார். ஆனால் அவரது வண்டி கிளம்பியதும் அவரின் சொந்த கட்சிக்காரர்கள் என்ன கமெண்ட் அடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவரது எந்த சதி திட்டமும் எடுபடவில்லை. இனியும் எடுபடாது. திராவிட மாடல் 2.0 வில் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு நிச்சயம் அடையும்” என்றார்.
