பாஜக தேசியத் தலைவரின் பதவிகாலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. எனினும் கடந்த 2020ஆம் ஆண்டு பதவியேற்று தற்போது பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி நட்டாவின் பதவிகாலம் முடிந்த பின்பும் 2024 மக்களவைத் தேர்தலுக்காக முதன்முதலாக நீட்டிக்கப்பட்டது.
அதன்பின்னர், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக அது நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை பாஜக புதிய தேசிய தலைவருக்கான பதவிக்காலம் நடத்தப்படாமல் உள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
அதனையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
மாநிலங்களவையில் பாஜகவிற்கு 102 எம்பிக்களுடன் பெரும்பான்மை உள்ளது. எனினும் தேசிய ஜனநாயாக கூட்டணி கட்சியினருக்கு ஏற்ற வகையிலும், எதிர்க்கட்சியினரை சமாளிக்கும் தன்மையுள்ள வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக தலைமை உள்ளது.
எனவே குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியும் வரை, கட்சி தனது புதிய தேசியத் தலைவருக்கான தேர்தலை நிறுத்தி வைத்துள்ளதாக பாஜக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.’
அதே நேரத்தில் வரும் அக்டோபரில் பிகார் சட்டப்பேரவை தேர்தல், அதனையடுத்து தமிழ்நாடு, மேற்குவங்க சட்டப்பேரவை வருகிறது. அதோடு மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டி உள்ளது. இதனால் உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடிய புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளதால், அதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால் மீண்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
