விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் பிரச்சனை எழுந்ததால் இதுவரை படம் வெளியாக வில்லை.
இந்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தின் தொடக்கக் காட்சி மற்றும் ஒரு சண்டைக்காட்சி இணையத்தில் வெளியானது. அடுத்த சில மணி நேரத்தில் 3 மணி நேர முழு திரைப்படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இந்த சம்பவம் படக்குழுவினருக்கு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ஜனநாயகன் படத்தை பகிர்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக ஜனநாயகன் திரைப்படம் வெளியாக கால தாமதம் ஏற்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சாரி கருத்து சொல்ல விரும்ப வில்லை என்ற தெரிவித்த ரஜினிகாந்த் இன்று இனியும் இதுபோன்ற குற்றம் தொடரக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஏப்ரல் 4) தனது எக்ஸ் பதிவில், “ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.” என தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பதிவில், “மனம் உடையும்படியானது மற்றும் அநீதியானது. ஒரு முழு குழுவின் உழைப்பும் இப்படி வீணடிக்கப்பட்டுவிட்டது. உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து அந்தத் திரைப்படத்தை இணையத்தில் பார்க்கவோ, பகிரவோ அல்லது அதைப் பற்றி விவாதிக்கவோ வேண்டாம்.
அவர்களின் உழைப்பிற்கு மரியாதை கொடுங்கள். நான் என் நண்பர்களுடன் நிற்கிறேன், இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன், இது மன்னிக்க முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் கார்த்திக் தனது எக்ஸ் பதிவில், “ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது ஒரு முழுத் திரையுலகத்தையே பாதித்துள்ளது. இந்தச் செயல் நியாயமற்றது, அறநெறியற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது. பார்வையாளர்கள் படக்குழுவினருக்கு ஆதரவாக நின்று, சரியான முறையில் படத்தைப் பார்ப்பதன் மூலம் சினிமாவின் ஆன்மாவை நிலைநிறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
