பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் அணியில் விளையாடியவர் கார்த்திகா.
இறுதிப் போட்டியில் ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றிக்கு முக்கியக் காரணமானார். பல முக்கியமான புள்ளிகள் பெற்றார். இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார் கார்த்திகா.
அது கூடப் பெரிய விஷயம் இல்லை.
சென்னை மாநகர் பகுதியில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஏழை மக்கள், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட – அடிப்படை வசதிகள் பெரிதாக இல்லாத – போதைப்பொருட்கள் புழக்கம், அதனால் குற்றங்கள் அதிகமான நடக்கும் இடம் என்று ஒரு பொதுக் கருத்து உருவாகி இருக்கிற, கண்ணகி நகரில் வாழ்ந்து கொண்டு கார்த்திகா அந்தச் சாதனையை செய்திருக்கிறார் என்பதுதான் சாதனைகளுக்கு எல்லாம் சாதனை. அதுவே ஐந்து ஒலிம்பிக் பதக்கங்களுக்கு சமம்.
அவருக்கு ஐந்து கோடிக்கு மேல் கொடுத்தாலும் தகும்.
தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கார்த்திகாவுக்கு இருபத்தைந்து லட்சம் கொடுத்து வாழ்த்தினார். (அதோடு தங்கம் வென்ற ஆடவர் அணி வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினேஷுக்கும் இருபத்தைந்து லட்சம் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர்).
பைசன் பட இயக்குனர் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் மற்றும் பைசன் தயாரிப்புத் தரப்பினர் சார்பாக, கார்த்திகாவுக்கு பத்து லட்சம் கொடுத்தார்.
ஆனால் இவர்கள் எல்லோரையும் விட கம்மியாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்த மன்சூர் அலிகான், ஒரு பரபரப்பான வாக்குறுதியைக் கொடுத்து இருக்கிறார்.
அதாவது கார்த்திகா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அவரது கல்யாணத்துக்கு நூறு பவுன் நகை போடுவதாகச் சொல்லி இருக்கிறார் மன்சூர் (ஹுசூர் … இப்பவே தொன்னூத்தி ரெண்டு லட்சம்!).
இப்பதான் நமக்கு அந்த சந்தேகம் வருது.
‘ஒலிம்பிக்கில் வென்றால் பத்து பவுன் தருகிறேன்’ என்று சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கு.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, அப்புறம் கார்த்திகா கல்யாணம் செய்து கொள்ளும் போது தான் ”நூறு பவுன் போடுகிறேன் என்கிறார்.
அப்போ எத்தனை தங்க மெடல்கள் வாங்கினாலும் கார்த்திகா கல்யாணம் பண்ணிக்கலன்னா நகை போட மாட்டாரா?
இவர் நூறு பவுன் போடுவார் என்பதற்காக கார்த்திகா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியுமா?
தமிழ் நாட்டுப் பெண் என்பதால் ‘மத்திய அரசு கண்டுகொள்ளவே கண்டு கொள்ளாது; எந்த பரிசும் தராது’ என்பதால் ‘பேசாமல் நூறு பவுனோடு செட்டில் ஆகி வறுமையில் இருந்து விடுபடுவோம்” என்று கார்த்திகா நினைத்து விட்டால் கபடியில் அவர் சாதனை என்னாவது?
அப்படி நம்பி அவர் கபடியையும் கை விட்டு கல்யாணம் செய்து கொள்ளும் போது, மன்சூர் அலிகான் நூறு பவுன் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆவது?
இப்படி குழப்பி விட்டுட்டீங்களே ஹுசூர்?
இது நகை விசயம்தானே? ‘நகை’ (காமடி விஷயம்) இல்லையே?
- ராஜ திருமகன்
