சில சமயம் படத்தை விட, அந்தப் படம் சம்மந்தப்பட்டவர்கள் கொடுக்கும் பேட்டிகளில் நகைச்சுவை, சென்டிமென்ட், திருப்பம், அதிர்ச்சி, டுவிஸ்ட் இவை எல்லாம் இருக்கும். அடடா என்று வருந்தவும் அடடே என்று ஆச்சர்யப்படவும் பல விஷயங்கள் இருக்கும். பேசாமல் இதையே படமாக எழுதி எடுத்திருந்தால் கூட சூப்பராக இருந்திருக்குமே என்று நினைக்கத் தோன்றும்.
அப்படி ஒரு பேட்டிதான் இது. கொடுத்தவர் தேசியத் தலைவர் படத்தில் முத்துராமலிங்கத் தேவராக நடித்த பஷீர்.
ஓவர் டூ பஷீர். இனிமே நீங்களாச்சு அவராச்சு!
”பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய தலைவர் தேவர் பெருமகன் என்கிற படத்தில் நான் முத்துராமலிங்கத் தேவராக நடித்துள்ளேன்.
இந்த படம் விஜய் அஜித் படங்களை போன்று மாஸ் ஆன படம் இல்லை இது கோவிலுக்கு செல்வதைப் போல குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கிறார்கள்.
திரையில் அவர்கள் என்னைத் தேவராக பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அய்யாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு இந்த பிறவியில் தேவர் பெருமானின் வேடத்தில் நடித்துள்ளேன் என்றால் போன ஜென்மத்தில் அவர் வீட்டின் நாயாக நான் பிறந்திருப்பேன் அதனால் தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் எடுத்து சென்று சேர்ப்போம். ஜான்பாண்டியன் அண்ணன் இந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குனரைப் பாராட்டி இருக்கிறார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு பெரிய அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்களை வரை என்னை பாராட்டி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நடித்தது ஆயிரம் படத்திற்காக நடித்தது போல் உள்ளது.
அய்யாவின் வேஷத்தை அணிந்தால் இறந்து விடுவேன் என்று சொன்னார்கள்.
நான் அஜ்மீர் தர்காவை வணங்குபவன் அவரைப் போல் முத்துராமலிங்க தேவரும் ஒரு சித்தர் தான். இந்த படத்தில் நல்லபடியாக நடித்து முடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் இந்த ஒரு மாதமாக காப்பு கட்டி உள்ளேன் பசும்பொன் சென்று இப்போது காப்பை கழட்டப் போகிறேன். 100% அய்யாவின் பக்தராக மாறிவிட்டேன்.
சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் ஜாதிய படம் என்று சொல்வதால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார் இது ஜாதி படம் இல்லை ஜாதி இல்லாத படம் என்ன சொல்லி இருக்கிறார் நிச்சயம் இது அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி அடையும்.
தேவர் என்றாலே பிரச்சினை வரத்தான் செய்யும் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தடைகளையும் உடைத்து எனது தயாரிப்பாளர் முத்துராமலிங்க தேவர் ஐயாவின் ஆசியுடன் உடைத்துக் கொண்டு வந்திருக்கிறோம்.
என் வீட்டிற்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள் அது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை அய்யா துணை எனக்கு இருக்கிறது நான் பார்த்துக் கொள்வேன். என் உயிர் உள்ளவரை அய்யா முத்துராமலிங்க தேவருக்கு நான் கடைசி தொண்டனாக இருக்க விரும்புகிறேன்.
படம் பார்த்து விட்டு முன்னாள் முதல்வர்கள் இரண்டு பேர் பேசியிருக்கிறார்கள். துணை முதல்வர் பேசிப் பாராட்டி இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஒருவர் இரண்டு முறை பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் உலகநாயகனும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.
ஓவர்.
- ராஜதிருமகன்
