சில திரைப்படங்களின் கிளைமாக்சை சுபமாக முடிப்பதா அல்லது சோகமாக முடிப்பதா என்பதில் அந்தப் படம் எடுப்பவ்ர்களுக்கே குழப்பம் இருக்கும். அது போன்ற சமயங்களில் இரண்டு கிளைமாக்சையும் எடுத்து வைத்துக் கொள்வார்கள். கடைசியில் இரண்டையும் சேர்த்து இரண்டு முறை தனித்தனியாக படம் பார்ப்பார்கள். அதாவது ஒரு முறை சுபமாக முடிவது. அடுத்த முறை சோகமாக முடிவது.
பார்ததவர்களில் அதிகம் பேர் எந்த முடிவைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த முடிவை படத்தில் வைப்பார்கள். அப்படி வைத்தும் தப்பாகப் போனால், காத்திருந்து போல கிளைமாக்சை மாற்றி விடுவார்கள். அப்படி மாற்றியும் பயனிலை என்ற நிலையை அடைந்த பரிதாபப் படங்களும் கூட உண்டு..
ஆனால் கொஞ்ச நாளாக அப்படி ஒரு சம்பவம் தமிழ் சினிமாவில் நடக்கவே இல்லை. (அது சரி .. உருப்படியா வித்தியாசமா எழுதினால்தானே அந்தக் குழப்பம் எல்லாம் வரும் ?)
விஷ்ணு விஷால் நடித்த பிரவீன் இயக்க கடந்த 31 ஆம் தேதி வெளியான படம் ஆர்யன். படத்தின் கிளைமாக்ஸ் ”நியாயமில்லை ; அநியாயம்” என்று நாம் விமர்சனத்தில் குறிப்பிட்டு இருந்த விசயமே மக்கள் கருத்தாகவும் இருந்தது. எனவே இரண்டாம் தேதி வரை நன்றாகப் போன ஆர்யன் படம் திங்கள் முதல் சுணங்கியது.
டிஜிட்டல் வியாபாரம் மூலம் விஷ்ணு விஷால் போட்ட காசை எடுத்து விட்டார் என்று கூறப்பட்டாலும் தியேட்டரில் வெற்றி பெறுவதுதான் ஒரு படத்துக்கான இமேஜை உயர்த்தும்.
எனவே அது போன்ற சமயங்களில் நன்றி அறிவிப்பு அல்லது வெற்றி சந்திப்பு என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் விளம்பரம் மூலம், படத்தை ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்த முயல்வது இயல்புதான்.
அதுபோல ஆர்யன் படக்குழுவும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடத்துகிறது என்று பார்த்தால்….. சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை!
சாதாரணமாகப் பேச்சை ஆரம்பித்த விஷ்ணு விஷால் ஒரு நிலையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, “படத்தோட கிளைமாக்ஸ் நியாயமில்லை’ என்று பலரும் சொன்னதால் இப்போது அந்த கிளைமாக்ஸ் மாற்றி விட்டோம். ஆரம்பத்தில் எடுத்திருந்த கிளைமாக்ஸ் இதுதான். அதுதான் இன்று முதல் படத்தில் வரும் ” என்றார்.
அந்தக் காலம் என்றால் ஓகே. ஆனால் இப்போது விஷ்ணு விஷால் இப்படிச் சொன்னதும் அதிர்ந்த பத்திரிக்கையாளர்கள், “நாங்க அந்தக் கிளைமாக்சுக்கு விமர்சனம் எழுதி இருக்கோம். இப்போ புது கிளைமாக்ஸ் போட்டு, படம் நன்றாக இருந்தால் மக்கள் எங்களைத் தப்பாக நினைப்பார்களே ” என்றனர்.
உடனே படத்தின் இயக்குனர் பிரவீன், ” அதாவது மாத்திட்டோம்னா… பழைய கிளைமாக்ஸ் அப்படியே இருக்கு. அதோடு கொஞ்சம் சேர்த்திருக்கிறோம். அவ்வளவுதான். பழைய கிளைமாக்ஸசும் இருக்கு “என்றார்.
எல்லோரும் மலங்க மலங்க விழிக்க,
மீண்டும் பேசிய விஷ்ணு விஷால் “இந்த புது கிளைமாக்ஸ் மக்களுக்கு பிடிக்கும் ” என்றார். மீண்டும் குழப்பம்.
இன்னொரு முறை படம் பார்த்து என்ன மாற்றி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் தைரியம் யாருக்கும் இல்லாததால் அத்துடன் நிகழ்ச்சி முடிந்தது.
கடைசி வரை எந்த கிளைமாக்ஸ் படத்தில் இருக்கிறது என்ற சஸ்பென்ஸ்க்கான கிளைமாக்ஸ் என்ன என்று தெரியாமலே எல்லோரும் கலைந்தார்கள்.
தைரியமாக அந்தப் படத்தை இரண்டாவது முறை தியேட்டரில் பார்க்கும் யாராவது (அப்படி யாரும் இருந்தால்…!) பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும்?!
- ராஜ திருமகன்
