இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்.
இளையராஜா முதன் முதலாக அன்னக்கிளி படத்துக்கு இசை அமைத்து முதல் பாடலை பதிவு செய்ய ஆரம்பித்தபோது, கரென்ட்போனது அபசகுனம் என்று பேசப்பட்டது என்றால், கங்கை அமரன் இசையமைத்த முதல் படமான மலர்களிலே அவள் மல்லிகை என்ற படம் வெளிவரவே இல்லை, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படம் தான் அவர் இசையமைத்து வெளிவந்த முதல் படம்.
மவுன கீதங்கள், வாழ்வே மாயம் போன்ற படங்களில் இவரது இசை பெரும் வெற்றி அடைந்தது.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றால் அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான் அல்லவா?
இளையராஜாவின் இசையில் இவர் முதன் முதலாக இயக்கிய கோழி கூவுது படம் கமர்ஷியல் ஹிட். (அதற்கு சில்க் ஸ்மிதாவும் ஒரு காரணம் என்பதை ஓப்பன் பண்ணி சொல்லாமல் இருக்க முடியாது)
அதே இளையராஜாவின் இசை தந்த யானை பலத்தோடு கிராமத்துக் கரகாட்டக்கலையை வைத்து இவர் இயக்கிய ‘கரகாட்டக்காரன்‘ மாபெரும் வெற்றி பெற்றது. (அடுத்த ரெண்டு ஆண்டுகளில் அதுவே அதே இளையராஜாவின் இசையில் பி வாசு இயக்கத்தில் வந்த ‘சின்னத்தம்பி’ படம் அதுவரை தமிழ் சினிமா காணாத வசூல் சாதனையை படைத்தது என்று அப்போது ஒரு கணக்கு சொல்லப்பட்டது. காரணம் இளையராஜா.
சுமார் இருபது படங்களை இயக்கி அறுபது படங்களுக்கு இசையமைத்த கங்கை அமரன், சில படங்களில் நடிகராக தலைகாட்டி இருக்கிறார்.
ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக முழு நீளக் கதைநாயகனாக, லெனின் பாண்டியன் என்ற படத்தில் துரைராசு என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை டி டி பாலசந்திரன் என்பவர் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது என்றால் அது தயாரிப்புத் தரத்தில் குறை வைக்காது என்பதால் இந்தப் படத்துக்கு ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதுல பாருங்க… பழந்தின்று கோட்டை போட்டு, அந்தக் கொட்டையும் செடியாக முளைத்து மரமாக வளர்ந்து விட்ட கதையாக, ஒரு காலத்தில் சாதித்து ஆண்டு அனுபவித்து ஓய்ந்து அமைதியானவர்களை எல்லாம் திரும்பப் போய் தட்டி இழுத்து வந்து வாய்ப்புத் தரும் அதிசயம் தமிழ் சினிமாவில்தான் நடக்கிறது.
- ராஜ திருமகன்
