சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் என்பவருக்கு தொடர்பு இருப்பதும், அவரது வீட்டில் 3.5 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் கிளையான ஃபேட் பேங்க் கோல்டு லோன்ஸ் வங்கி உள்ளது.
இங்கு கடந்த 13ம் தேதி காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு சுமார் 32 கிலோ தங்க நகைகளை முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை மாநகரில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 11 தனிப்படை போலீசார் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது.
கொள்ளை போன தங்க நகைகள் மீட்பு!
இதில் அந்த வங்கியின் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது காவல்துறையின் உடனடி விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே முருகனின் குடும்பத்தினரிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை செய்தனர்.
அதனைதொடர்ந்து 14ம் தேதி சந்தோஷ், பாலாஜி, செந்தில் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள், 2 கார்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதற்கு மறுநாள் (ஆகஸ்ட் 15) முக்கிய குற்றவாளியான முருகனையும், 16ம் தேதி கோவையில் இருந்து சூர்யாவையும் கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர்

கொள்ளையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர்?
இந்நிலையில் தற்போது இந்த கொள்ளை வழக்கில் அச்சரபாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அச்சரபாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் அமல்ராஜ்.
இவரது மனைவி வழி உறவினர் ஒருவர் அரும்பாக்கம் கொள்ளை கும்பலில் இருந்துள்ளார்.
கொள்ளையடித்த தங்கத்தில் மூன்றரை கிலோவை போலீஸ் காரர் மனைவியிடம் கொடுத்து வைத்தால் பத்திரமாக இருக்கும் என்று நம்பி அமல்ராஜின் மனைவியிடம் கொடுத்து வைத்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்து அச்சரப்பாக்கம் சென்ற போலீஸார், அமல்ராஜ் வீட்டில் விசாரித்துள்ளனர். தன் மனைவியை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று தானே போலீசாருடன் சென்றதாக அமல் ராஜுவுக்கு நெருக்கமான அச்சரப்பாக்கம் போலீஸார் கூறுகிறார்கள்.
ஆனால், செங்கல்பட்டு எல்லையான ஆத்தூர் சோதனைச் சாவடியின் போது இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் இந்த தங்கத்தை கைப்பற்றி தன் வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டதாக தனிப்படை வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

சுதந்திர தினத்துக்கு கொடியேற்றாத இன்ஸ்பெக்டர்
கொள்ளை போன தங்கம் போலீஸ் வீட்டிலேயே இருந்ததால் முதலில் இந்தத் தகவலை வெளியாகாமல் பார்த்துக் கொண்டனர் போலீஸார்.
கஸ்டடியில் இருந்ததால் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தில், அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடியேற்ற அமல்ராஜ் செல்லவில்லை.
அமல்ராஜுக்கு பதிலாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ் செல்வி, அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி உள்ளார்.
இதனால் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஊர் பிரமுகர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் விசாரிக்க, ‘இன்ஸ்பெக்டர் ட்ரைனிங் போயிருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார்கள் போலீஸ் நிலைய வட்டாரத்தில்.
வங்கி கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் இதுவரை முழுமையாக கைது செய்யப்படாததால், தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளும் துவங்கியிருக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
