சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த இரு தற்காலிக ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்த அர்ஜுன் குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர், முறையே பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பணிகளைத் தற்காலிக அடிப்படையில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை 4.30 மணியளவில் சாய்பாபா காலனி, பாரதி பார்க் 1-வது வீதியில் உள்ள கழிவு நீர் உந்து தொட்டியில் பழுதடைந்த 60 ஹெச்.பி. மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மோட்டாரைத் தொட்டிக்குள் இறக்கி பொருத்திய பிறகு மேலே ஏறும் போது, அர்ஜுன் குமார் தொட்டியில் உள்ள பைப்பில் தலையில் மோதி தொட்டிக்குள் விழுந்தார்.
இதைக் கண்ட பைப்பில் ஏறிக்கொண்டிருந்த சுரேஷ் குமார், அவரை மீட்க மீண்டும் கீழே இறங்கினார். அப்போது மயக்கம் ஏற்பட்டு அவரும் தொட்டியில் விழுந்தார்.
15 அடி விட்டமும் 40 அடி ஆழமும் கொண்ட இந்தக் கழிவு நீர் தொட்டியில், 15 அடிக்கும் மேல் கழிவு நீர் இருந்த நிலையில் இருவரும் சிக்கினர். தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், கழிவு நீரை வெளியேற்றி மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணியில், இருவரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டன.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஊழியர்களைப் பணிக்கு அனுப்பியதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
