சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்து விடுகிறது. மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை கூறி வருகிறேன். எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக்கூடாது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் .
இருமொழிக் கொள்கைதான்!
தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் விழுக்காடு 75%-ஆக உள்ளது. 100% மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே இலக்கு.
கடந்த ஓராண்டில் மட்டும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 901 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை தனித்துவமானது. முற்போக்குச் சிந்தனை கொண்டது. எதிர்காலத் தேவைக்கான ஆற்றலை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கையில் தாய்மொழியான தமிழ், பிரதானமான அடையாளமாக இருக்கும்.
படித்து மனப்பாடம் செய்வது போன்று அல்லாமல், சிந்தித்து கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. படித்த மாணவர்களாக மட்டுமல்லாமல், படைப்பாளர்களாகவும் அவர்களை உருவாக்கும். அறிவியலுக்கு புறம்பான சிந்தனைகள் இதில் இல்லை.
இந்தக் கல்விக் கொள்கை மூலம் கல்வியில் உலகளாவிய போட்டிகளை நமது மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம். தமிழ்நாட்டில் இந்த மாநில கல்விக் கொள்கை மூலம் சமத்துவ கல்வியை உருவாக்குவோம், அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம், பாகுபாட்டை நீக்குவோம்” என ஸ்டாலின் பேசினார்.
10, 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு!
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ”தற்போது அமலில் உள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு கல்வியாண்டு முதலே ரத்து செய்யப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இதுதவிர, 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது, தமிழ், ஆங்கிலம் என்ற
இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும். இனி 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (All Pass) வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும். தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்க வேண்டும் மற்றும் பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் போன்றவை பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
