முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் – 2

Published On:

| By Balaji

சந்திப்பு: தமயந்தி

*(ஷர்மிளா ஸெய்யித்.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான சமகாலப் படைப்பாளர்களில் முக்கியமானவர். அவரது கலகக் குரல் பெண் புனைவு மையத்தைக் கலைத்துப் போட்டு பின் அதில் நீந்தும் வண்ணங்களோடு வேறொரு சாயம் கலங்காத வானத்தைப் பரிந்துரை செய்கிறது. இதனாலே எண்ணிலடங்கா எதிர்ப்புகளைச் சந்திக்கும் ஷர்மிளாவுடான இந்த உரையாடல் நிலப் போர் சூழலையும் மனப் போர் இறுக்கத்தையும் மதப் போர் அடக்குமுறைகளையும் முழுதாக வரைய முற்படுகிறது.)*

**பலதார மணத்துக்கு எதிராக உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதன் சிக்கல்களாக நீங்கள் பார்ப்பது எவற்றை?**

ADVERTISEMENT

பலதார மணம் குறித்த தவறான அபிப்பிராயங்கள் சமூகத்தில் நிரம்பிக் கிடப்பதே முதல் சிக்கல். ஒரு ஆண் இடுப்பு வலுவோடும் பாக்கெற்றில் பணத்தோடும் இருந்தால் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வரையான மனைவிகளை வைத்திருக்கலாம் என்கின்ற பொதுவான புரிதல் அபத்தமானது. சுயகௌரவமிழந்து அந்தஸ்து இழந்து தங்களது பிள்ளைகளுக்கு உரிய சுயமரியாதையும் பராமரிப்பையும் இழந்து என்று பலதார மணத்தினால் பாதிக்கப்படுகின்ற பெண்களின் பிள்ளைகளின் குடும்பங்களின் பட்டியல் நீளம். இவர்களின் உளவியல் சிக்கல் ஒருபுறம், பொருளாதார நெருடிக்கடிகள் மறுபுறமென்று காலப்போக்கில் புறந்தள்ளப்பட்ட வாழ்வு நிலைக்கே ஒரு ஆணின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் தள்ளப்படுகின்றனர்.

பலதார மணம் என்பது இஸ்லாத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுவதால் இஸ்லாத்தின் பார்வையிலேயே இதனை அணுக வேண்டியும் உள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாம் ஆண்கள் பலதார மணம் செய்வதை வரவேற்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ வலியுறுத்தவில்லை. ஆணொருவன் தான் முறையற்ற உறவை நாடிச் சென்றுவிடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறான முறைகேடான காரியத்தைச் செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்கே இஸ்லாம் அனுமதித்திருக்கிறது.

குர்ஆனின் நான்காவது அத்தியாயத்தின் 3 ஆவது வசனத்தில் ”மனைவியர் (அந்நிஸா)” இதற்குத் தெளிவான விளக்கம் உள்ளது.

ADVERTISEMENT

“உங்களுக்கு விருப்பமான பெண்களை – இரண்டோ, மூன்றோ, நான்கோ – மணந்துகொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).”

அதே அத்தியாயத்தின் 129ஆம் வசனத்தில், “(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது” என்று மனித இயல்பை அழுத்தம் திருத்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது அல்குர்ஆன்.

அல்குர்ஆனின் இந்தக் கட்டளையை மீறியவர்களாகவே பல ஆண்கள் பலதார மணம் செய்கிறார்கள். அவர்கள் தங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை நீதமாக நடத்துவதில்லை. குழந்தைகளை நீதியாகப் பராமரிப்பதில்லை.

“சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)” என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

“சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது” என்று அல்குர்ஆனே கூறிய பின்னரும் பலதார மணத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதை இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்றுபோலக் கூவிக்கொண்டு பெண்களைப் பலியாக்குவது மதத்தின் பெயரிலான வன்கொடுமை.

**ஹாதியா – உங்கள் கருத்து?**

ஹாதியா விடயத்தைப் பல்வேறு தளங்களில் விவாதிக்க முடியும். ஒன்று மதசுதந்திரம் அல்லது மதத்தைத் தேர்வு செய்யும் உரிமை தொடர்பானது. இரண்டு, ஜனநாயக அரசியலமைப்பைக் கொண்ட அரசின் இறையாண்மை அல்லது அரசியல் பற்றியது. மூன்று நீதித் துறையின் சுயாதீனத்தன்மையில் செல்வாக்குச் செலுத்தும் அதிகாரங்கள் தொடர்பானது. நான்கு இஸ்லாமிய அமைப்புக்களின் அல்லது இஸ்லாமியவாதிகளின் இரட்டைத் தன்மை.

சுயநினைவோடு ஒரு பெண், தான் விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், இதில் கட்டாயங்கள் எதுவும் இருக்கவில்லை என்று நீதிமன்றிலே தோன்றிக் கூறிய பின்பும், மகளை மனமாற்றி மூளைச்சலவை செய்கிறார்கள் என்கிற பெற்றோரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பது அபத்தமான நிலை.

இங்கே நீதிமன்றம் கரிசனை எடுத்துக்கொண்டிருக்கும் ‘மூளைச்சலவை’ என்பதற்கு கடந்த கால வழக்குகளில் ஒன்றான ‘கீதா – லதா’ வழக்கை நோக்க வேண்டும்.

2016ஆம் ஆண்டு, துறவு பூண்டு அங்கேயே தங்கிவிட்ட கீதா – லதா சகோதரிகள் வழக்கும் இதே போன்றதுதான். அந்தப் புகாரும் தங்கள் மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாகவே பெற்றோர்களால் முன்வைக்கப்பட்டது.

அந்த இரு பெண்களும் மேஜர். தங்கள் வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதையும், ஈஷா மையம் எங்களை எந்த வித மூளைச்சலவையும் செய்யவில்லையெனவும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.

இரண்டுமே ஒரே வழக்குகள். கீதாவும் லதாவும் மேஜர் என்கிற அடிப்படையில் அணுகிய இந்தியச் சட்டம் ஹாதியா மதம் மாறியதிற்கு ‘லவ் ஜிஹாத்’ என்று லேபல் அடிப்பதும் ஹாதியாவின் கணவனுக்குத் தீவிரவாதி முத்திரை குத்த முயற்சிப்பதும் இந்தியாவின் இந்துத்துவ மனநிலையை உறுதியாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களாகின்றன.

இஸ்லாமியர்களை அந்நியப்படுத்துவதற்காக இந்துத்துவா சக்திகள் தோண்டும் ஆழமான அரசியல் குழியில் இந்திய நீதித் துறையும் வீழ்ந்துவிட்டதா என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

**மதங்கள் ஒட்டுமொத்தமாகவே பெண்களுக்கு எதிரானவையா?**

சமகால மத ரீதியான இயக்கங்களின் அரசியல் ஆதிக்கம் மிக வலியது. இது எப்படியானதென்றால் பெண்களையும் உள்வாங்கிக்கொண்ட வகையில் பெண்களுக்கு அநீதி இழைக்கின்ற முறைமையுடன் கூடியது. இது மிக ஆபத்தானது. மதங்களில் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும் என்ற அனைத்தையும் ஆண்களே தீர்மானம் செய்கின்றனர். அந்தத் தீர்மானங்களுக்கு மதச் சாயத்தைப் பூசுகின்றனர். பெண்களை அடக்கி ஆள்வது மத அடிப்படைவாதத்தின் மிகப் பெரிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக மேலும் மேலும் வலுவடைந்துவருகிறது.

**இஸ்லாத்தில் உங்களைக் கவர்ந்தது?**

இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைத் திட்டத்தின் ‘மூலம்’ கவரக்கூடியதுதான். காலப்போக்கில் தங்களுக்கு வசதியானபடியாக இஸ்லாத்தை இஸ்லாமிய அரசுகளும் மத நிறுவனங்களும் வளைத்து ‘மெய்’மையைக் குழப்பிவிட்டன. அரசியல் அதிகாரமும் வணிகமும் இஸ்லாத்தைக் கூறுபோடத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. இஸ்லாத்தில் கவர்ந்தவற்றை மீட்டெடுக்க காலச் சக்கரத்தில் பின்னோக்கி உருண்டு செல்ல வேண்டும்.

**உங்கள் கருத்துக்கள் அடிப்படைவாதிகளுக்கு எரிச்சலூட்டும், எதிர்ப்பு வருமெனத் தெரிந்தும் நீங்கள் வெளிப்படுத்துவதன் மனபின்புலம்?**

அடிப்படைவாதிகளை எரிச்சலூட்டுவது எனது வேலையில்லை. எரிச்சல் அடையும்படி அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். கேள்விகளுக்கு அவர்களிடம் பதில்கள் இல்லை. அல்லது நாகரீகமான அறிவார்ந்தமான உரையாடல்களுக்குரிய பொறுமையும் தகைமையும் அவர்களுக்கு இல்லை. சமகாலத்தில் பெண்களை ஒடுக்குவதற்கு ஒரு உதாரணமாக என்னைக் காண்பிக்க அடிப்படைவாதிகள் முற்படுகின்றார்கள். இந்த மோசமான அரசியலுக்கு அடிபணிய விரும்பவில்லை. எனது குரல் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானதில்லை. மதத்தின் பெயரால் பெண்களைக் கையாள எண்ணும் அரசியலுக்கு எதிரானது. பெண்களின் சுதந்திரக் குரல்கள் பேய்களின் கூச்சலைப் போல் அடிப்படைவாதிகளைத் தொந்தரவு செய்துகொண்டேயிருக்க வேண்டும். நீண்டகால உலக வரலாற்றில் பல பெண்கள் இந்தப் போராட்டத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றைய காலத்திலும் பல பெண்கள் உள்ளார்கள். எனக்குப் பிறகும் இந்தப் பணியை வேறு பெண்கள் செய்வார்கள். அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்தும் வெளிப்படுத்துவதனுடாக உடனடியான மாற்றங்கள் நிகழாமல் போகலாம், ஆனால் நேர்மறைச் சக்தியை (Positive Energy) கடத்தும் பணியைச் செய்கின்றவர்களாகிறோம்.

**என்றாவது வேறு மதத்தில் பிறந்திருக்கலாம் என நினைத்திருக்கிறீர்களா?**

சட்டியிலிருந்து அடுப்பில் விழுவதென்று எங்கள் ஊரில் சொல்லப்படுகின்ற ஒரு சொலவடைதான் நினைவு வருகிறது.

**இந்த உலகில் மதம் என்று இல்லாவிட்டால்**

மதங்கள் இல்லாதுவிட்டிருந்தால் இன்றுள்ளதைவிடவும் மோசமானதாக இந்த உலகம் இருந்திருக்கலாம். மனித மேம்பாட்டுக்காக, வாழ்வை நெறிப்படுத்துவதற்காகவே மதங்கள் தோன்றின என்றே நம்புகிறேன். மனித நாகரீக வளர்ச்சியில் மதங்களின் பங்கு தவிர்க்க முடியாதது.

**ஈழம் – இன்றைய தமிமீழப் பெண்களின் நிலை… போராளிப் பெண்கள் … போருக்குப் பிறகு தனித்திருக்கும் பெண்கள்…**

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லத் தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. மக்கள் இன்னும் முள்ளிவாய்யக்காலின் தாக்கங்களிலிருந்து வெளிவரவில்லை. உலக வரலாற்றிலிருந்து துடைத்தெறிய முடியாத அந்தத் துயரத்தைக் கடப்பதற்கான மாற்றங்கள் களத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வில் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. காணாமலாக்கப்பட்டவர் குடும்பங்களின் ஒப்பாரிகள் ஓயவில்லை. அரசியல் கைதிகளின் நிலைகளை அரசு இன்னும் மக்களுக்குச் சொல்வதற்குத் தயாரில்லை. அகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களின் வாழ் நிலங்களிலிருந்து இராணுவத்தை அப்புறப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் ‘நல்லாட்சி’ அரசிலும் நீடிக்கின்றது. இப்படியொரு நிலத்தில் பெண்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?

**தமிழ்ப் பெண்களுக்கு எதிராக என்னென்ன வன்முறைகள் நிகழ்ந்தன?**

இலங்கை அரசும் அரச படைகளும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இழைத்த வன்முறைகள் உலகறிந்தவை. இலங்கை அரச படைகளாலும், இலங்கைக்கு அமைதி காக்கவென 1987 – 1990களில் வந்த இந்திய அமைதிப் படையினராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாகிக் கொல்லப்பட்ட பெண்களின் பட்டியல் நீளமானது.

1971இல், தங்களது சொந்த இனப் பெண்ணான மனம்பேரியைப் பாலியல் சித்திரவதை செய்து வன்கொலையில் அனுபவ முதிர்ச்சி பெற்ற படைதான் இலங்கை இராணுவம்!. இந்தக் கொலை அனுபவத்துடன் கிருஷாந்தி, கோணேஸ்வரி, இசைப்பிரியா என வன்முறையின் கரங்கள் நீள்கின்றன. இவை சில மட்டும்தான். தெரிந்தும் தெரியாமலும் பல ஆயிரம் பெண்களை இலங்கை இராணுவம் ஏப்பமிட்டுள்ளது. பல புதைகுழிகள் இதற்குச் சான்றாக உள்ளன.

போர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் தனிப் பெற்றோராக்கிவிட்டுள்ளது. குழந்தைகளை வளர்க்கவும் குடும்பத்தை நிர்வாகம் செய்யவும் துணையிழந்து ஒழுங்கான வருமானமில்லாமல், அதேநேரம் அரசியல் கைதியாக இருக்கும் கணவனை விடுவிப்பதற்கு அல்லது காணாமலாக்கப்பட்ட கணவனைக் கண்டுபிடிப்பதற்கு போராட்டங்களையும் செய்துகொண்டு உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடிவற்ற துயரங்களைச் சுமந்தவர்களாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்கின்றனர்.

**இலங்கைப் போர்சூழலில் இஸ்லாமியச் சமூகம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது?**

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலை என்பது, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை. சிங்களப் பேரினவாதத்தின் கோரத்தனமான கவனம் இப்பொழுது முஸ்லிம் சமூகத்தில் விழுந்துள்ளது. முஸ்லிம்களைத் திட்டமிட்டு ஒடுக்கும் செயல்பாடுகள் தெற்கில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. போர்ச் சூழலில் வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடிக்கு ஆட்பட்டிருந்தது. முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைப் போர்ச் சூழலில் இயங்கிய பல உதிரி இயக்கங்களில் ஒன்றாகவே புலிகள் நோக்கினர். இது வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களைப் பலவந்தமாக வெளியேற்றியும், கிழக்கில் காத்தான்குடி, ஏறாவூர் நகரங்களிலும் பள்ளித்திடல், பங்குறானை போன்ற விவசாய – எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களைக் கொன்றும் மாபெரும் வரலாற்றுத் தவறுகளைப் புலிகள் அமைப்பு இழைப்பதற்குக் காரணமாகியது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்று அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தையும் போர்ச்சூழல் வலிந்து உருவாக்கியது.

**ஒரு பக்கம் நிலம் சார்ந்த அரசியல். மறுபுறம் மதம் சார்ந்த அரசியல். எது வலியது, எது கொடியது?**

இரண்டுமே கொடியது. என்னுடைய அனுபவத்தில் மதம் சார்ந்த அரசியலே வலிய தாக்கங்களைச் செய்வதாக நம்ப விரும்புகிறேன். மத த் தீவிரவாதத்தின் உச்சநிலையே சிலபோது நிலம் சார்ந்த அரசியலையும் தீர்மானிக்கிறது. உலகில் பெரும்பாலான அரசியல் – மத அடிப்படைவாதத்தினால், ஏகாதிபத்திய அடிப்படைவாதம் உறுதியடைந்திருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் அரசியல் நோக்கத்திற்கு உதவும் வகையில் மத வெறி ஊடடப்படுகிறது. மத இயக்கங்கள் அரசுகளைத் தோற்றுவிக்கின்றன. அரசியலும் மத அடிப்படைவாதமும் ஒரு புள்ளியிலிருந்து துவங்கிய இரு கோடுகள்.

**பால் பிரச்னைகள், பால்நிலைப் பிரச்னைகள் குறித்து?**

பால் எனப்படும் உயிரியல் ரீதியான வேறுபாடு மனிதரிடையே இருப்பதுபோலவே ஏனைய உயிரினங்களான விலங்குகள், பறவைகள், தாவரங்களிலும் உள்ளது. பால்நிலை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குண இயல்புகளும் அவை தொடர்பான பாத்திரங்களுமே. பால்நிலைக் கோட்பாடுகள் சமூகம் ஆணையும் பெண்ணையும் எவ்வாறு வகைபிரிக்க விரும்புகிறது என்பதிலிருந்து தொடங்குகிறது. இயல்பிலேயே இனப்பெருக்கத்தின் மூலமாகப் பெண் படைக்கப்பட்டிருப்பதனால், பால்நிலைக் கோட்பாடானது பெண்ணின் பாத்திரத்தினை ஆணில் தங்கியிருக்க வேண்டியதாக மட்டுப்படுத்துகிறது.

இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலைக் கல்வி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளான இலங்கை இந்தியா போன்றவற்றில் பால் – பால்நிலை சமத்துவம் வேறுபாடு என்பவற்றைப் பேசுவது இன்னமும் சர்ச்சைக்குரிய விவாதங்களாகவே உள்ளன. இந்த நிலைக்கான முக்கிய காரணமே பால் – பால்நிலை பற்றிய தெளிவின்மையே. பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய விடயங்கள் உள்வாங்கப்படுவது இந்த இடைவெளிக்குத் தீர்வாக அமையலாம்.

**தனிப் பெற்றோராக இருக்கும் பெண்களின் சிக்கல்கள் என்னென்ன?**

(நேர்காணலின் நிறைவுப் பகுதி மாலை 7 மணிப் பதிப்பில்)

[பகுதி – 1](https://minnambalam.com/k/2017/12/19/1513641627)

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share