விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தஞ்சாவூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றபோது விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் விக்னேஷ், 19 நாள் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார். இச்சம்பவம் தொண்டர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தஞ்சாவூருக்குப் பயணித்தார்.

ADVERTISEMENT

அப்போது, வழியெங்கும் திரண்டிருந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தைத் தங்களது இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே விஜய்யின் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்து அதிவேகமாக வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதில் விக்னேஷுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 19 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவர் விக்னேஷ், நேற்று (மார்ச் 24) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தின்போதும் இதேபோன்ற விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது மற்றுமொரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், விஜய்யின் வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share