புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து புதுவை திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறியதாவது: காங்கிரஸும் நாங்களும் தேசத்திற்காக, மொழிக்காக, இனத்திற்காக நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையிலே புதுச்சேரியை வளமான புதுச்சேரியாக, வலிமையான புதுச்சேரியாக மாற்றுவதற்காக நாங்கள் இரண்டு பேரும் மீண்டும் தேர்தலிலே மக்களைச் சந்திக்க இருக்கிறோம்.
எங்களுடைய கூட்டணி என்பது திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் பேரியக்கம், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லாரும் சேர்ந்து போட்டியிடுகிறோம். தொகுதி எண்ணிக்கைகள் வந்து 16 அவங்க நிக்கிறாங்க (காங்கிரஸ் பேரியக்கம்), நாங்க 14 நிக்கிறோம். கூட்டணிகளுக்கு நாங்க கொடுக்கணும். இவ்வாறு ஜெகத்ரட்சகன் கூறினார்.
மேலும் தமது எக்ஸ் பக்கத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி. பதிவிட்டுள்ளதாவது: புதுச்சேரியில் காங்கிரஸ் 16; திமுக 14 இடங்களில் போட்டி. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில்காங்கிரஸ் -திமுக கூட்டணிஅமைத்து போட்டியிடுகிறோம்.இந்த கூட்டணி 30 ஆண்டுகளாக நீடிக்கிறது.திமுகவுக்கு ஒதுக்கப்டுள்ள 14 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை பகிர்ந்து கொடுப்போம். இவ்வாறு ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
