பள்ளிபாளையம் பகுதியில் கிட்னியை விற்று கடனை திருப்பி தர நெருக்கடி கொடுத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்து பனை பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் சேலத்தில் தினேஷ் மற்றும் ஹரி என இருவர் நடத்தும் ஸ்டுடியோவில் நந்தகோபால் பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் தனிப்பட்ட நெருக்கடியால் தினேஷிடம் கடன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார் .
இதனால் தினேஷ் பணம் கொடுத்துள்ளார். மேலும் வேறு சில தனிப்பட்ட நபர்களிடமும் கடனாக பணம் வாங்கி கொடுத்துள்ளார். இந்த அடிப்படையில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை நந்தகோபால் வெளியிடங்களில் கடன் பெற்றதாத கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் நந்தகோபால் முறையாக பணத்தை திருப்பி செலுத்தாததால் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். அதனால் ஸ்டுடியோ நடத்தும் தினேஷ் உள்ளிட்ட பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி தர கோரி வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நந்தகோபால் வீடியோ வாக்குமூலம் ஒன்றை தன்னுடைய செல்போனில் வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர் ஹரிதான் காரணம் என தெரிவித்துள்ளார். பின்னர் நேற்று இரவு சாணி பவுடர் குடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொந்தரவு எதுவும் இல்லாததால் இன்று அதிகாலை வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திறகு வந்த பள்ளிபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இதில் தினேஷும், தற்கொலை செய்து கொண்ட நந்தகோபாலும் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் நந்தகோபாலிடம் தினேஷ் நீ உடனடியாக 2 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து தர வேண்டும். பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. எனவே உனது கிட்னியை விற்றாவது நீ எங்களுக்கு பணம் தர வேண்டும்.” என வலியுறுத்தி பேசும் ஆடியோவும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
