‘நீரஜ் சகோதரரே, உங்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ என சோப்ராவுக்கு ஆதரவாக பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் குரல் கொடுத்துள்ளார்.
ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் கடந்தாண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. yogeswar dutt supports neeraj chopra
இவர் வரும் மே 24-ம் தேதி பெங்களூருவில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்க பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கு அழைப்பு விடுத்திருந்தார் நீரஜ் சோப்ரா. ஆனால் மே 22-ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று அர்ஷத் நதீம் நிராகரித்தார்.

இதற்கிடையே கடந்த 22ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாதலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்ததை அடுத்து அவரது தேசப்பற்று குறித்து சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் நீரஜ். அதில், “கிளாசிக் போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமுக்கு நான் அழைப்பு விடுத்தது குறித்து அதிகம் பேசப்படுகிறது, அதில் பெரும்பாலானவை வெறுப்பு மற்றும் துஷ்பிரயோகமாக உள்ளது. என் குடும்பத்தைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.
அர்ஷத்துக்கு நான் விடுத்த அழைப்பு ஒரு தடகள வீரரிடமிருந்து மற்றொரு விளையாட்டு வீரருக்கு சென்றது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு போட்டிகளில் பங்கேற்க வருமாறு அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தீவிரவாத தாக்குதலில் தங்களது உறவினர்களை இழந்து தவிப்பவர்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. நடந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தேசத்துடனும் சேர்த்து நானும் காயமும் கோபமும் அடைகிறேன். எனது நாடும் அதன் நலன்களும் எப்போதும் முதன்மையாக இருக்கும். நம் நாட்டின் பதில், ஒரு தேசமாக நமது வலிமையைக் காண்பிக்கும் மற்றும் நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன்.
பல ஆண்டுகளாக எனது நாட்டை பெருமையுடன் சுமந்து வருகிறேன், எனவே எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் குறிவைக்கும் மக்களிடம் நான் விளக்க வேண்டியிருப்பது எனக்கு வேதனையளிக்கிறது.
நாங்கள் எளிய மக்கள், தயவுசெய்து எங்களை வேறு எதுவாகவும் காட்ட வேண்டாம். ஊடகங்களின் சில பிரிவுகள் என்னைச் சுற்றி பல தவறான கதைகளை உருவாக்கியுள்ளன, ஆனால் நான் பேசவில்லை என்பதால், அது உண்மையாகிவிடாது. மக்கள் எவ்வாறு கருத்துக்களை மாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் எனக்கு கடினமாக உள்ளது” என நீரஜ் தெரிவித்திருந்தார்.
எனினும் அவருக்கு எதிராக சிலர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற முன்னாள் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ”நீராஜ் சகோதரரே, நீங்கள் உங்கள் தேசபக்தியை யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை. வெளிநாட்டு மண்ணில், மூவர்ணக் கொடியை உயர்த்தி, தங்கள் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்கள் விளையாட்டு வீரரும், ராணுவ வீரரும் தான்.
தேசத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல், அற்ப மனப்பான்மை கொண்ட நபர்கள் தான் இப்படி முட்டாள்தனமான விமர்சனம் செய்வர். நீங்கள் சாம்பியன். நாட்டின் பெருமை” என யோகேஸ்வர் தத் தெரிவித்துள்ளார்.