உலகிலேயே முதன்முறையாக நடந்த விந்தணு பந்தயத்தில் 20 வயதான டிரிஸ்டன் மில்கர் என்ற இளைஞர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். world first sperm race got huge success
கார் பந்தயம், சைக்கிள் பந்தயம், ஓட்டப் பந்தயம் என மனிதர்களால் நடத்தப்பட்ட பலவகையான பந்தயங்கள் இதுவரை உலகம் கண்டுள்ளது.
ஆனால் ஆண்களின் விந்தணு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் பலேடியம் அரங்கில் முதன்முறையாக நடந்த விந்தணு பந்தயம் தான் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தது 1.5 – 2 கோடிக்கும், அவற்றின் அசைவுத்திறன் 40%க்கு மேலாகவும், உருவ அமைப்பு 4%க்கு மேலாகவும் இருப்பது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் நிரூபித்துள்ளனர்.
ஆனால், சமீபகாலமாக ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன், பணிச்சூழல், கூடிவரும் ஆணின் வயது, புகைபிடித்தல், போதைப்பழக்கம் போன்ற காரணங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், செயல்பாடுகள் ஆகியவை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.
உலகம் முழுவதும் 1970கள் தொடங்கி இன்றுவரை ஆண்டுக்கு 1.2% என்கிற விகிதத்தில் நாளுக்கு நாள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதனை ஆரோக்கிய குறைபாட்டை கண்ணுக்குத் தெரியாத பேரழிவு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதன் எதிரொலியாக தான் கடந்த சில ஆண்டுகளாக, ஊருக்கு ஊர் செயற்கைக் கருத்தரிப்பு நிலையங்கள் உலகெங்கும் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் ஆரோக்கியமான விந்தணு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 17 வயதான பல்கலைக் கழக மாணவர் எரிக் சூ என்பவர் கண்டுபிடித்த விளையாட்டு தான் விந்தணு பந்தயம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களிடையே விந்தணு எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக நான் படித்தேன். இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் பேரழிவு ஏற்படும். மனிதர்களே பிறக்க மாட்டார்கள். இதனால் பூமியே அழிந்துவிடும். அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ரேஸை நடத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
பந்தயத்திற்காக பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து 1.5 மில்லியன் டாலர் நிதியும் திரட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பல்லேடியத்தில் UCLA, USC எனும் இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையே சுமார் 5,000 பார்வையாளர்கள் மத்தியில் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 20 வயதான டிரிஸ்டன் மில்கர் (USC) மற்றும் 19 வயதான ஆஷர் ப்ரோகர் (UCLA) ஆகியோர் பங்கேற்றனர்.
இருவரின் விந்தணுக்கள் போட்டிக்கு முன்கூட்டியே சேகரிக்கப்பட்டது. அவை பெண்ணின் உடல் உறுப்பு போலவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு மில்லிமீட்டர் நீளமுள்ள சிறிய ரேஸ் டிராக்கில் ஒரே நேரத்தில் விடப்பட்டது.
இந்த மிகச் சிறிய ரேஸ் டிராக்கை மைக்ரோஸ்கோப் மூலம் 100 மடங்கு பெரிதாக்கி, 3D அனிமேஷனாக மாற்றி அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது. இந்த போட்டி யூடியூபிலும் ஒளிப்பரப்பான நிலையில், இதை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரலையில் பார்த்தனர்.

போட்டியின் முடிவில் 20 வயதான டிரிஸ்டன் மில்கர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் ரூபாய் 8.30 லட்சம் ($10,000) ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த போட்டியால் ஆரோக்கியமான விந்தணு குறித்த விழிப்புணர்வு மட்டும் ஏற்படவில்லை. நம் சமூகத்தில் காலங்காலமாக குழந்தையின்மைக்கு காரணமாக பெண்களுக்கு மட்டுமே மலடி என பட்டம் கொடுக்கும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. தற்போது நடந்துள்ள போட்டியின் மூலம் குழந்தையின்மைக்கான காரணத்தில் ஆண்களுக்கும் சமபங்கு உள்ளது என்பதை இந்த போட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.