சமீபத்தில் புனேவிலுள்ள யர்னஸ்ட் அண்டு யங்க் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் ஊழியர் அன்னா செபாஸ்டின் என்பவர் பணி அழுத்தம் காரணமாக உயிரை இழந்தார். இந்த சம்பவம் இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணி அழுத்தம் காரணமாக மற்றொரு பலி நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கோம்திநகர் பகுதியிலுள்ள ஹெச்.டி.எப்.சி வங்கியில் இணை வைஸ் பிரசிடென்டாக சடாஃப் பாத்திமா என்ற பெண் பணியாற்றினார். இவர், செப்டம்பர் 24 ஆம் தேதி பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென சேரில் இருந்து விழுந்து மயங்கினார்.
உடனடியாக, அவரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து போனார். இவருக்கு 45 வயதாகிறது. பாத்திமாவின் திடீர் இறப்புக்கு பணியில் இருந்த அழுத்தமே காரணமென்று சக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, ஹெச்.டி.எப்.சி வங்கி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த பெண்ணின் மரணத்தையடுத்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ”பாரதிய ஜனதா அரசு பொருளாதாரத்தில் எப்படி ஸ்ட்ரெஸ்சை ஏற்படுத்துகிறதோ, அதே போல ஊழியர்கள் பணி அழுத்தம் காரணமாக உயிரை இழக்கவும் காரணமாக இருக்கிறது. இது போன்ற திடீர் இறப்புகளை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?. இது நாட்டின் மனித வளத்தை அழித்து விடும் செயல் ஆகும்” என்று கண்டித்துள்ளார்.
இதற்கிடையே, புனேவில் செயல்பட்டு வந்து யர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம் மகாராஸ்டிரா அரசிடத்தில் இருந்து லைசென்ஸ் பெறாமலேயே இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் 2024 ஆம் தேதிதான் லைசென்சுக்கு விண்ணப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!