ஒரு மாதம் முழுக்க ரிலீஸ் ஆகிற தமிழ் திரைப்படங்களில் யோகிபாபு நடித்தவற்றைத் தனியாகக் கணக்கிட்டு விடலாம். அப்படித் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் பல படைப்புகள் முழுமையாகத் தயாராகிக் காத்திருப்பு பட்டியலில் இருப்பவையாக அமையும். அந்த அளவுக்கு இடைவிடாமல் தொடர்ந்து நடித்து வந்தவர் சமீபகாலமாகக் கதைத் தேர்வுகளில் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறார். அதற்கேற்ப, அவரது தற்போதைய தேர்வுகளும் அடுத்தடுத்து வெளியீட்டை நோக்கி நகர்ந்து வருகின்றன. ‘அந்த இரு வரிசைகளில் இப்படம் எதில் சேர்த்தி’ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது ‘ ஜோரா கைய தட்டுங்க’ டைட்டில். will yogibabu defeat santhanam and soori with JKT
இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தால் நமக்குக் கிடைக்கும் அனுபவமோ வேறாக இருக்கிறது.
’ஜோரா கைய தட்டுங்க’ படத்தில் ஒரு மேஜிக் நிபுணராகத் தோன்றுகிறார் யோகிபாபு. ‘இதுல இவரு சிரிக்கவே மாட்டாரு போல’ என்பதாகத் திரையில் தெரிகிறது அப்பாத்திரம். ’இப்படியொரு சீரியஸ் ரோல்ல யோகிபாபுவை பார்த்ததில்ல’ எனும் ரகத்தில் உள்ளது.
மண்டேலா உட்படச் சில படங்களில் கதை நாயகனாக நடித்திருக்கிறார் யோகிபாபு. கோமாளி, லவ் டுடே, கர்ணன் மாதிரியான படங்களில் குணசித்திர வேடங்களில் மிளிர்ந்திருக்கிறார். ஆனாலும், அப்படங்களில் மருந்தளவுக்காவது அவர் ஏற்கும் பாத்திரங்களில் ‘காமெடி’ ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் ‘இந்த படம் அந்த வரிசையில் வராது’ என்பதாக அமைந்திருக்கிறது ‘ஜோ.கை.த’ ட்ரெய்லர்.
‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ எனும் திரைப்படம் 2013இல் வெளியானது. அதனை வினீஷ் – பிரபீஷ் இரட்டையர் இயக்கியிருந்தனர். அதில் ஒருவரான வினீஷ் மில்லினியம் தான் இதனை இயக்கியிருக்கிறார். பாடல்களுக்கு எஸ்.என்.அருணகிரி இசையமைக்க, பின்னணி இசையை ஜிதின் கே ரோஷன் கையாண்டிருக்கிறார்.
அஞ்சலி, நம்மவர், சிருங்காரம் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மது அம்பாட்டும் இதிலுண்டு. ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு செய்திருந்தார். ’என்னதான் டிஜிட்டல் கேமிராவில் படம்பிடித்தாலும் ஒளியமைப்பில் வித்தை செய்வதற்கு அனுபவம் தேவை’ என்று சொல்வதாக அமைந்திருக்கிறது அவர் வடிவமைத்திருக்கிற பிரேம்கள்.
இப்படத்தில் சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி உட்படப் பலர் நடித்துள்ளனர். ‘கிரைம் த்ரில்லர்’ வகைமையில் இப்படம் இருக்கும் என்ற எண்ணத்தை விதைக்கிறது ட்ரெய்லர்.
தான் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட விழாக்களில், ஊடக சந்திப்புகளில் யோகிபாபு கலந்துகொள்வதில்லை என்ற சர்ச்சை பெரிதாகி வந்த சூழலில், ‘ஜோ.கை.த’ ட்ரெய்லர் வெளியீட்டுவிழாவில் அவர் பங்கேற்றார். ‘நான் ரெண்டு சீன்ல நடிச்ச படத்தோட ப்ரோமோஷனுக்கு வரலைன்னு சொல்றாங்க. இது என்னோட படம். அதனால வந்திருக்கேன்’ என்று சொல்லி, தன் மீதான சர்ச்சைகள் குறித்துப் பதிலளித்திருந்தார். அதனால், இப்படத்தின் வெற்றி அவருக்கு நிச்சயம் மிக முக்கியமானதாக அமையும்.
இந்த வாரம் இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது. சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, சூரியின் ’மாமன்’ படங்களோடு போட்டி போடவிருக்கிறது ‘ஜோரா கைய தட்டுங்க’.
ஒருகாலத்தில் நகைச்சுவை நடிகர்களாக, கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்த நடிகர்கள், சட்டென்று திரையின் நடுப்பகுதிக்கு ஜம்மென்று இடம்பெயர்வது சாதாரண விஷயமில்லை. கண்டிப்பாக மேற்சொன்ன படங்களும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்கிற நம்பிக்கையை ரசிகர்களிடத்தில் விதைத்திருக்கின்றன.
‘ஜோரா கைய தட்டுங்க’ என்று தியேட்டரில் ரசிகர்கள் சொல்கிற வகையில் இப்படம் இருக்குமா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும். கூடவே, ரொம்ப சீரியசான பாத்திரங்களில் யோகிபாபு நடித்தால் வரவேற்பு கிட்டுமா என்பதற்கும் பதில் கிடைக்கும்..!
ச