அன்று நான் ஒரு தேங்காய் பன்னுக்காக அலைஞ்சேன். ஆனால் இன்று அதே திருப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்குறாங்க இதைவிட பெருமை என்ன இருக்க முடியும்! என நடிகர் சூரி பெருமிதத்துடன் பேசியுள்ளார். actor soori remembered his tirupur life with tears
புரூஸ்லி மற்றும் விலங்கு வெப்சீரிஸை தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்.
சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மாமன் பட புரோமோசனுக்காக நேற்று (மே 12) திருப்பூரில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சூரியும், ஐஸ்வர்யா லட்சுமியும் பங்கேற்றனர்.
அப்போது சூரி, திருப்பூரில் தனது சிறுவயதில் தொழிலாளியாக உழைத்த தருணங்களை உருக்கத்துடன் நினைவு கூர்ந்து பேசியது பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்தது.
அவர் பேசுகையில், ”எனக்கு 14 வயது இருக்கும்போது இதே திருப்பூரில் பனியன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செஞ்சேன். அப்போ நான் ஒரு தேங்காய் பன்னுக்காக அலைஞ்சேன். ஆனா இன்னிக்கு அதே திருப்பூரில் எனக்கு இந்த காலேஜூல் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறாய்ங்க. இதைவிட பெருமை என்ன இருக்க முடியும்!
தொழிலாளர்களால் உயர்ந்த ஒரு ஊர் என்றால் அது திருப்பூர்தான். இந்த ஊரில் உருவாகும் ஆடைகளை உடுத்துக் கொள்வதே பெருமையான விஷயம். எனது வாழ்நாளில் இந்த திருப்பூரை மறக்கவே முடியாது. அன்றைக்கு இதே திருப்பூரில் ஒரு சிறுவனாக வேலை செஞ்சேன். இன்றைக்கு நான் நடித்துள்ள ஒரு படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடக்கிறது. இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்!
கடுமையாக உழைத்தாலே வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என்பதை நிரூபிக்கும் ஊர்தான் இந்த திருப்பூர். எனது வளர்ச்சிக்கு காரணம் என்னுடைய உழைப்பு தான். கடுமையான உழைப்புக்கு பிறகுதான் உயர்ந்திருக்கிறேன். ஆனால் மற்றவர்களை போன்று தரையில் இருந்து நான் வளரவில்லை. தரைக்கு கீழே இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இதற்காக நம்பிக்கையுடன் கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்பு தான் இன்றைக்கு இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது” என்று சூரி பேசினார்.