சிக்னல் கொடுப்பாரா விஜய்?பாஜக உறவை ‘அடியோடு’ முறித்த ஓபிஎஸ்- உருவாகும் புதிய கட்சி- புதிய கூட்டணி?

Published On:

| By Mathi

TVK OPS Alliance Talks

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து (NDA) வெளியேறுவதாக ஓபிஎஸ் (OPS Faction) தலைமையிலான அதிமுகவின் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னையில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜூலை 31-ந் தேதி 3 மணி நேரம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போதைக்கு எந்த கட்சியுடனும் உறவு இல்லை; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ADVERTISEMENT

பாஜக- அதிமுக கூட்டணி உறுதியானது முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ்-ன் இருப்பு கேள்விக்குள்ளானது. சென்னையில் பாஜக- அதிமுக கூட்டணியை அமித்ஷா அறிவித்த போது, ஓபிஎஸ்- தினகரன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என அமித்ஷா பதில் அளித்திருந்தார். இது ஓபிஎஸ் தரப்பை ரொம்பவே அப்செட் ஆக்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது ஓபிஎஸ் அணி. ஆனாலும் விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை என்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரொம்பவே தத்தளித்துப் போனது ஓபிஎஸ் தரப்பு.

ADVERTISEMENT

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தந்த போது, அவரை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதி இருந்தார். முன்னாள் முதல்வர், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒரு அணியின் தலைவர் என்ற நிலையிலும் கூட மிகவும் கெஞ்சிக் கேட்டு அந்த கடிதத்தை ஓபிஎஸ் எழுதி இருந்தார்.

ஆனாலும் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை மிக கடுமையான கோபத்துக்குள்ளாக்கியது. அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், வெளிப்படையாகவே, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசினார்.

ADVERTISEMENT

இதனிடையே, ‘மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு என்னிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன்.. பிரதமர் மோடி அடுத்த முறை தமிழகம் வரும் போது முயற்சிக்கிறோம்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

இது பற்றி ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசன நடத்திய போதும் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர், இனியும் பாஜகவை நம்பவே வேண்டாம்.. இதுவரை நம்பியதும் போதும் என கறாராகவே சொல்லிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கான கல்வி நிதி விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டார் ஓபிஎஸ். அத்துடன் ஜூலை 31-ந் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் ; அந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்தார்.

இதனிடையே ஜூலை 29-ந் தேதி விஜய் தரப்பை ஓபிஎஸ் அணி மீண்டும் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது, “நாங்க 4 எம்.எல்.ஏக்கள் இருக்கிறோம். ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் என உங்க கூட்டணிக்கு 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது ரொம்பவும் முக்கியமான அரசியல். அதனால் நாங்க தனிக்கட்சி தொடங்கி உங்களுடன் கூட்டணி அமைக்கிறோம்” என்றும் திரும்ப திரும்ப பேசியிருக்கின்றனர்.

இதனை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட விஜய் தரப்பு, ‘ஆலோசித்துவிட்டு பேசுகிறோம்’ என சொல்லிவிட்டது.

இதனால் விஜய் தரப்பு எப்படியும் கூட்டணிக்கு அழைக்கும் என மலைபோல நம்புகிறதாம் ஓபிஎஸ் அணி.

இந்த நம்பிக்கையில்தான், ஓபிஎஸ் இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில். “பாஜகவுடனான கூட்டணியை 1999-ல் ஜெயலலிதா முறித்தது வரலாற்றுப் பிழை அல்ல; வரலாற்றுப் புரட்சி” என கூறியிருந்தார். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவது உறுதியானது.

இந்த பரபரப்புகளுக்கு இடையேதான் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் ஓபிஎஸ் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், “பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடு நன்கு அறியும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம்.. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறோம்” என அறிவித்தார்.

ஓபிஎஸ் அணி ஏற்கனவே புதிய அரசியல் கட்சியை தொடங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனால் அடுத்த சில நாட்களிலேயே புதிய அரசியல் கட்சியை ஓபிஎஸ் அணி அறிவிக்கக் கூடும்.

“விஜய் தரப்பில் சீக்கிரமே சிக்னல் கிடைத்துவிடும்; விரைவில் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் தொடங்கும்” என இப்போது தவெக-வை முழுமையாக நம்பிக் காத்திருக்கிறது ஓபிஎஸ் அணி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share