முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதியில், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக இன்று (ஜூலை 31) ஆலோசனை செய்தார்.
இதைத்தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபிஎஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், என்டிஏ கூட்டணி உறவை முறித்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது என்று பேட்டியளித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஓ பன்னீர்செல்வத்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக பயணித்த நீங்கள் இன்று அதிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறீர்கள்? இதற்கான வலுவான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “பதில் சொல்லாமல் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கிளம்பலாம் என்று தலையசைத்துக் காட்டிய பன்னீர்செல்வம்’ அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
முன்னதாக, காலை முதல்வரை சந்தித்து பேசி இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு
நான் சென்னையில் இருக்கும் போது நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி இன்று நான் நடைப்பயிற்சி சென்றபோது அவரும் நடைப்பயிற்சியில் இருந்தார். அப்போது இருவரும் வணக்கம் சொல்லிவிட்டு சென்றோம் என்றார்.
