வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுக்கவில்லையென்றால் அண்டம் நடுங்க கிடுகிடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசி வருகிறார். 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அது வன்னியர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சொல்லி வருகிறார். இப்போது வரை நடைமுறையில் இருக்கிற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வழங்கப்படும் 20% சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பதே அவர் முன்வைக்கிற வாதம்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆர்.டி.ஐ தகவல் பாமக நிறுவனர் ராமதாசின் வாதம் தவறானது என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளது. DT Next ஆங்கில நாளிதழில் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் இந்த ஆர்.டி.ஐ தகவல்களை பதிவு செய்துள்ளார். இப்போதைய நிலையில், 10.5% சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் வன்னியர்கள் பெற்றிருப்பதை இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னியர்கள் போராடி பெற்ற எம்.பி.சி இடஒதுக்கீட்டில் 108 சாதிகள் இடம்பெற்றுள்ளன. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கான போதுமான இடங்கள் எம்.பி.சி பிரிவில் கிடைப்பதில்லை என்கிறார் ராமதாஸ். அதற்காக 10.5% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
ஆர்.டி.ஐ பதில்
கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பி.பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையிடம் எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் வன்னியர்கள் பெற்றுள்ள இடங்கள் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
ஜூலை 31 தேதியிட்ட பதிலில் டி.என்.பி.எஸ்.சி பணியிடங்கள், ஆசிரியர் பணி, காவல்துறை, மருத்துவப் பணியிடங்கள் உள்ளிட்டவற்றில் வன்னியர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ் மாணவ சேர்க்கை
எம்.பி.பி.எஸ் படிப்பைப் பொறுத்தவரை 2018 முதல் 2022 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 24,330 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 4873 மாணவர்கள் 20% சதவீத எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளனர். இந்த 4873 மாணவர்களில் 2781 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது மொத்த எண்ணிக்கையில் 11.4% சதவீதம் ஆகும். இது பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைக்கும் கோரிக்கையான 10.5% சதவீதத்தை விட அதிகமாகும். மீதமுள்ள இடங்களில் 678 இடங்கள் டி.என்.சி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 1414 இடங்கள் (5.8%) எம்.பி.சி பிரிவில் உள்ள மற்ற சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கிடைத்துள்ளன.
பொதுப்பிரிவு இடங்களையும் சேர்த்து மொத்தம் 3,354 இடங்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 13.8% சதவீதம் ஆகும்.
PG மருத்துவப் படிப்பு
இதேபோல் பி.ஜி. மருத்துவப் படிப்பில் மொத்தம் 6966 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 20% எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் 1363 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த 1363 மாணவர்களில் 694 மாணவர்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது 10.2% சதவீதம் ஆகும். மற்ற எம்.பி.சி பிரிவு சாதிகளைச் சேர்ந்தவர்கள் 9.1% சதவீத இடங்களையும், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 4% இடங்களையும் பெற்றுள்ளனர்.
சப் இன்ஸ்பெக்டர்கள்
காவல்துறை பணிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தினால் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 1919 சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 327 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது மொத்த எண்ணிக்கையில் 17% சதவீதம் ஆகும்.
உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள்
அதேபோல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தினால் இதே காலக்கட்டத்தில் 8379 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 1185 பேர். இது மொத்த எண்ணிக்கையில் 10.8% சதவீதம் ஆகும். பொதுப்பிரிவையும் சேர்த்து பார்த்தோமென்றால் மொத்தமாக 1433 பேர் வன்னியர் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 17.1% சதவீதம் ஆகும்.
முதுநிலை ஆசிரியர்கள்
ஆசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் 3044 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் எம்.பி.சி இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் 634. இதில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 383 பேர். இது மொத்த எண்ணிக்கையில் 12.5% சதவீதம் ஆகும். பொதுப்பிரிவு சேர்க்கைகளையும் சேர்த்து பார்த்தோமென்றால் மொத்தமாக 17.5% பேர் வன்னியர் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணியிடங்களைப் பொறுத்தவரை 2012 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப் பகுதியில், எம்.பி.சி பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களில் 481 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 11.2% சதவீதம் ஆகும்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4
குரூப் 4 பணியிடங்களைப் பொறுத்தவரை 2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 26,784 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் வன்னியர்கள் மொத்தம் 5215 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கையில் இது 19.5% ஆகும்.
சிவில் நீதிபதிகள்
நீதிமன்ற நியமனங்களைப் பொறுத்தவரை, டி.என்.பி.எஸ்.சி-யால் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் எம்.பி.சி இடஒதுக்கீட்டின் கீழ் 79 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 39 பேர், அதாவது 9.9% பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆர்.டி.ஐ தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மேலே குறிப்பிட்ட முக்கிய துறைகளில் 10.5% சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்று வருவது தெரிய வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று சொல்லி 10.5% இட ஒதுக்கீடு கேட்கும் ராமதாசின் வாதம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது இந்த ஆர்.டி.ஐ தகவல்.
10.5% இட ஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு பாதிப்பா?
இந்த தகவல்களை இன்னொரு வகையில் பார்த்தோமென்றால் 10.5% சதவீத இடஒதுக்கீடு ஒரு சில இடங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பின்னடைவாகவும் மாறுகிறது. அது எப்படி என்பதைப் பார்ப்போம். மருத்துவக் கல்வியில் எம்.பி.சி ஒதுக்கீட்டில் 11.4% இடங்களை வன்னியர் சமூக மாணவர்கள் பெற்றுள்ளனர். ராமதாசின் கோரிக்கையான 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தோமென்றால் வன்னியர் சமூக மாணவர்கள் இதில் 0.9% இடங்களை இழப்பார்கள். கிட்டத்தட்ட 218 வன்னியர் சமூக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
அதேபோல் ஆசிரியர் பணியிடங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 12.5% பேருக்கு, அதாவது 383 பேருக்கு எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைத்துள்ளது. 10.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தோமென்றால் 2% பேருக்கு வேலைவாய்ப்பு குறையும். அதாவது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 60 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்காது.
இப்படி புதிதாக வெளியாகியுள்ள ஆர்.டி.ஐ தகவல்கள் பல விவாதங்களையும், கேள்விகளையும் சமூகத்தில் எழுப்பக் கூடியதாய் அமைந்திருக்கிறது.
ராமதாஸ் வெளியிட்ட மறுப்பு
இந்த செய்திக்கு மருத்துவர் ராமதாஸ் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், 1989 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்வாணையமும் நடத்திய போட்டித் தேர்வுகள் என்னென்ன? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் ஒவ்வொரு வகுப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? பொதுப்பிரிவுக்கான 31% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அவர்களே ஒரு பேரிடர்தான்” : பாஜக அரசை விமர்சித்த கனிமொழி
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு : துரைமுருகன் குற்றச்சாட்டு!