வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான கேள்விக்கு, பாஜக அரசே ஒரு பேரிடர் தான் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
இன்று(ஆகஸ்ட் 3) தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கத்தில் ஆர்.இ.சி.லிமிடெட் மற்றும் ALIMCO இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு இன்னும் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, ‘அவர்கள் எதையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனெனில் அவர்களே ஒரு தேசிய பேரிடர்தான்’ என்று விமர்சித்த கனிமொழி, “தூத்துக்குடியில் மழை வெள்ளம் வந்தபோதும், முன்கூட்டியே அதாவது ஏழு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கையை கொடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். அதை முதலமைச்சர் மறுத்தார்.
அதேபோல கேரள நிலச்சரிவுக்கும் கூறுகிறார்கள். கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். இதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மறுத்திருக்கிறார்.
பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு உதவி செய்வதில்லை, மாறாக முன்னெச்சரிக்கை செய்துவிட்டோம் என்று கூறுவதை மட்டும் அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்” என்று கூறினார்.
முன்னதாக, வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஜூலை 23ஆம் தேதியே நாங்கள் முன்னெச்சரிக்கை செய்துவிட்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா