மேகதாது அணையை கட்டவே விடமாட்டோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அணையில் அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆகஸ்ட் 3) ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் 16 கண் பாலம், சுரங்க மின் நிலையம், அணைப் பூங்கா மற்றும் வலது கரை ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் மேகதாது அணையை கட்டவே விடமாட்டோம். இதில் தமிழ்நாடு தீவிரமாக இருக்கிறது.
உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என கர்நாடகாதான் நீதிமன்றத்துக்கு போனது. இப்போது உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உபரிநீர் திட்டத்தில் 100 ஏரிகளை நிரப்புவதாக கூறியிருந்தார்கள். ஆனால், 100 ஏரிகள் எங்கு இருக்கின்றன என்று தெரியவில்லை. தற்போது வரை 52 ஏரிகளில் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராகவுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் சரி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலும் சரி மேகதாது என்ற பெயரே இல்லை.
ஆனால் தற்போது காவிரி நடுவர் மன்றம் மேகதாது குறித்து பேசுவது மத்திய அரசின் தூண்டுதலாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது.
உபரி நீரை சேமிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் நிதி இல்லை” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹெல்மெட்டுக்கு நோ… இர்ஃபானுக்கு செக் வைத்த போலீஸ்!
அருந்ததியர் 3% இடஒதுக்கீடு… ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!