நான் திமுகவின் பி டீம் இல்லை… எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்ததால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று (நவம்பர் 1) தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை செய்தார்.
அதன்பின் 11 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த இயக்கத்துக்காக இரவும் பகலுமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த திசையை நோக்கி கை காட்டுகிறாரோ அந்த திசையை நோக்கி பயணித்தேன். இந்த இயக்கத்திற்காக என்னை அரிப்பணித்துக்கொண்டேன். எதற்கும் இடம் கொடுக்காமல் நான் பணியாற்றியிருக்கிறேன் என்று அம்மா பாராட்டியிருக்கிறார்.
இமயமே தன் தலையில் விழுகிறது என்றாலும், சறுக்காமல் வழுக்காமல் இந்த இயக்கத்திற்கு விசுவாசமுள்ள தொண்டராக இருப்பதால் இத்தனை பொறுப்புகள் எனக்கு வழங்கியிருப்பதாகவும் அம்மா கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக எனக்கு இரண்டு முறை வாய்ப்பு வந்தும், சிறு தடை கூட வரக்கூடாது என அதையெல்லாம் விட்டுக்கொடுத்தேன்.
ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அவர் எடுத்த முடிவின் காரணமாக, பல்வேறு சோதனைகளின் காரணமாக 2019, 2021, மாநகரம், பேரூராட்சி, நகராட்சி, 2024 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை பொறுத்தவரை தோல்வியையே காணாதவர். ஜெயலலிதா ஒரே ஒருமுறை மட்டும் தோல்வியை சந்தித்தார்.
அவரது மறைவுக்கு பிறகு 4 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை வழிநடத்துவதற்காக அன்று சசிகலா எல்லோரையும் அழைத்து பேசி, எல்லோருடைய கருத்துகளையும் பகிர்ந்தார். என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். அவரிடத்தில் நான் சொன்னது எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அப்போது 122 பேர் தான். 11 பேர் வெளியில் இருந்தார்கள். எனவே இனியும் சிறிய அளவில் கூட சிதைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அன்று இவருக்காக பரிந்துரை கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்று பத்திரிகையாளர்களிடம் படித்த காண்பித்த அந்த முறையில் பேசுகிறேன்.
4 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினோம். இருந்தாலும் இவர் பொறுப்பேற்ற பின் வெற்றி என்ற இலக்கை அடையாத காரணத்தில் தான்… 2024 தேர்தல் முடிவுக்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வெளியே சென்றவர்கள், மனவேதனையோடு தங்கள் பணிகளை ஆற்றாமல் துயரத்தோடு இருப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று 6 பேர் சென்று அவரிடம் வலியுறுத்தினோம்.
ஆனால் இதை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை என்று சொல்லப்பட்டது. அதே சமயம் என்னை யாரும் சந்திக்கவில்லை என்று அவர் சொன்னார். இதைத்தொடர்ந்துதான் கடந்த 5 ஆம் தேதி மனம் திறந்து பேசினேன். அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் பேசினேன். அதேசமயம் நான் கெடு விதிக்கவில்லை. பேசி முடிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னேன்” என்றார்.
எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதால் தான் தேவர் ஜெயந்தியின் போது எல்லோரிடமும் நான் பேசினேன் என்று கூறிய செங்கோட்டையன், ‘இதற்கு கிடைத்த பரிசுதான் நான் இந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். நீக்கப்பட்டவர்களுடன் பேசியது உண்மைதான். இந்த இயக்கம் வலிமை பெற நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் நான் சொன்னேன். அதை நான் மறுக்கவில்லை.
எனவே என்னை திமுகவின் பி டீம் என்கிறார். ஆனால் பி டீம் யார் என்பதை நாடறியும். கொடநாடு வழக்கிற்கு இன்று வரை ஏன் குரல் கொடுக்கவில்லை. மூன்று, நான்கு கொலைகள் நடந்தபோதும் குரல் கொடுக்கவில்லையே.
என்னை பொறுத்தவரை நான் பி டீமில் இல்லை. அவர்தான் ஏ1ல் இருக்கிறார். இன்று வரை அவர் மீது திமுக என்ன செய்துகொண்டிருக்கிறது. சட்டமன்ற வரலாற்றில் துணை தலைவராக ஓபிஎஸ் இருக்கிற போது அவரை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது முதல்வரே எழுந்து இதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்று சொன்னார். 10 நிமிடத்தில் சபாநாயகரும் அறிவித்தார்.
அதற்கு முன்னாள் எத்தனையோ கடிதம் கொடுத்த போதும், முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் அந்த கருத்துகளை வெளிப்படுத்த முடியவில்லை. சட்டமன்ற பதிவேட்டில் இதெல்லாம் இருக்கிறது.
பி டீமாக நான் இல்லை. அவர் ஏ1ஆகவே இருக்கிறார்.
என்னை கட்சியில் இருந்து நீக்கியதால் உண்மையிலேயே வேதனை அடைகிறேன். கண்ணீர் சிந்துகிறேன். 53 ஆண்டுகளாக இந்த இயக்கத்துக்கான என்ன அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் பொறுப்புக்கு வருவதற்கு முன்னாலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் பல்வேறு பொறுக்குகளில் பணியாற்றியிருக்கிறேன். இவர் 1989ல் தான் வந்தார்.
அப்படியிருக்கும் போது எனக்கு ஒரு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அவரை விட நான் சீனியர். ஒரு கடிதத்தை அனுப்பி பதில் கேட்டிருக்க வேண்டும். அதுதான் விதிமுறை.
ஆனால் சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகிறார். கழக தொண்டர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அன்றைய பொதுச்செயலாளராக சின்னம்மா இருந்த போது இவர் எப்படி பதவி பெற்றார் என நாடறியும். துரோகம் யார் செய்தது? அந்தியூரில் என்ன நடந்தது. தோல்விக்கு யார் காரணம் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது.
அதிமுகவை கட்டிப்பிடித்து காப்பாற்றிய பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று சொன்னார் எடப்பாடி. ஒவ்வொரு நாளும், ஒன்று பேசுகிறார் எடப்பாடி.
விதியின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை. அதிமுகவில் தொடர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.
எல்லோருக்கு துரோகம் செய்வதில் நோபல் பரிசை எடப்பாடி பழனிசாமிக்குதான் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் அவர், ‘முதலில் என்னை நீக்கியதற்கு விளக்கம் கேட்க இருக்கிறேன். தலைவர் காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்த என்னை நீக்கியது குறித்து வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தொடர இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர்தான்’ என்றும் குறிப்பிட்டார்.
