கரூரில் செப்டம்பர் மாதம் நடந்த துயரச் சம்பவமான தவெக தலைவர் நடிகர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அஜித் மவுனம் கலைத்துள்ளார். இந்த துயரத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல, ஒட்டுமொத்த சமூகமாக நாமே பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக “ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா” இதழுக்கு நடிகர் அஜித் அளித்த பேட்டியில், “கூட்டத்தை சேர்ப்பது பெருமை என்ற மனப்பான்மை, ஊடகங்கள் முதல் நாள் காட்சிகளை பெரிதுபடுத்திக் காட்டுவது போன்றவற்றால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஒரு தனி நபர் மட்டும் இதற்குப் பொறுப்பல்ல, நாம் அனைவரும் பொறுப்பு” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். மேலும், “சமூகத்தில் கூட்டத்தை சேர்ப்பது குறித்த மோகம் அதிகமாகிவிட்டது, இது முடிவுக்கு வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஹீரோ வழிபாடு கலாச்சாரம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தவறான பெயரை ஏற்படுத்துகிறது; வெற்றி என்பது ஒரு காட்டு குதிரை போன்றது. யார் வேண்டுமானாலும் அதன் மீது ஏறலாம், ஆனால் அதை அடக்க முடியாவிட்டால், அது உங்களைத் தூக்கி எறிந்துவிடும்” என்றும் அஜித் சுட்டிக்காட்டினார். ரசிகர்களின் அன்பிற்காக நடிகர்கள் கடுமையாக உழைத்து, குடும்பத்தைப் பிரிந்து, காயங்களைக்கூட பொறுத்துக்கொள்வதாகவும், ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த சரியான வழிமுறை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். கரூர் துயரச் சம்பவம் குறித்துப் பேசும்போது, நடிகர் விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்ட அஜித், இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் அவர் மட்டும் குற்றம் சாட்டப்படக் கூடாது என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
