ADVERTISEMENT

செங்கோட்டையன் அலுவலக பேனரிலிருந்து எடப்பாடி படம் மறைப்பு!

Published On:

| By Kavi

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரிலிருந்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டுள்ளது.

செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் நீண்டகாலம் கோலோச்சிய செங்கோட்டையன், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களான சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இவை கட்சியின் கொள்கைகளுக்கும், ஒழுங்குமுறைக்கும் எதிரான நடவடிக்கைகள் என்று கூறி, எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.

முன்னதாக, அ.தி.மு.க. 2019 முதல் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து தொண்டர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

ADVERTISEMENT

இதற்குப் பதிலடியாக, செப்டம்பர் 6, 2025 அன்று அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 அன்று கோபிசெட்டிப்பாளையம் சுற்றியுள்ள அந்தியூர், அத்தாணி, வாணிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சுமார் 40 பேர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

எனினும், கட்சியை ஒன்றிணைப்பதில் தனது உறுதிப்பாட்டை செங்கோட்டையன் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில், இன்று (நவம்பர் 1, 2025) காலை 11 மணிக்கு மேல் கோபி குல்லம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில், கட்சி நீக்கம் குறித்து செங்கோட்டையன் விரிவான விளக்கம் அளிக்கவுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இ.பி.எஸ்.ஸின் ‘தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்திற்கு கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் அழைக்கப்படாதது, நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு போன்ற முக்கிய கட்சி நடவடிக்கைகளில் அவருக்கு உரிய பங்காற்ற வாய்ப்பு வழங்கப்படாதது போன்ற காரணங்களால் அவர் இ.பி.எஸ். மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு இ.பி.எஸ்.ஸின் பிடிவாதமே முக்கியக் காரணம் என்றும் செங்கோட்டையன் கருதியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியில், தற்போது இபிஎஸ். புகைப்படம் மறைக்கப்பட்டதும், ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டதும், அதிமுக.வில் உள்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதையே காட்டுகிறது.

தற்போது இந்த பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share