தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!

Published On:

| By vivekanandhan

தேர்தல் பத்திரங்கள் மூலமாக மறைமுகமாக அடையாளம் வெளிக்காட்டாத நிறுவனங்களிடமிருந்து பாஜக 8252 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றிருந்தது. இந்த விவரங்களை வெளியிடாமல், எங்களுக்கு கால அவகாசம் தேவை என்று எஸ்.பி.ஐ இழுத்தடித்த நிலையில் அனைத்து விவரங்களையும் உடனே வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்குப் பின்பும் எஸ்.பி.ஐ வெளியிட்ட தரவுகளில் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்கள் இடம்பெறவில்லை. இதனால் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு பணம் கொடுத்தது என்பது தெரியாமல் இருந்து வந்தது.

எஸ்.பி.ஐ சீரியல் எண்ணை ஏன் வெளியிடவில்லை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் தீவிரமாகக் கேள்வி எழுப்பியதுடன், அதனை மார்ச் 21 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சீரியல் எண்களுடன் நேற்று (மார்ச் 21) தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியானது.

இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியாவிலேயே அதிகமாக நிதி பெற்ற பாஜகவிற்கு எந்தெந்த நிறுவனங்கள் நிதி அளித்தன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. அதிலும் மார்ச் 1, 2018 முதல் ஏப்ரல் 12, 2019 வரையிலான காலக்கட்டத்தில் மாற்றப்பட்ட பத்திரங்கள் குறித்த தரவுகள் இல்லாததால் அந்த காலக்கட்டத்தில் பாஜகவினால் மாற்றப்பட்ட 4000 கோடி ரூபாய்க்கான பத்திரங்கள் யார் கொடுத்தது என்ற விவரங்கள் தெரிய வரவில்லை. அதற்குப் பின்பான காலத்தில் எந்த நிறுவனங்கள் எவ்வளவு கொடுத்தன என்ற விவரங்கள் தற்போது தெரியவந்திருக்கிறது. அதில் டாப் நிறுவனங்கள் இதோ.

மேகா குரூப் (Megha Engineering and Infrastructures Limited)

பாஜகவிற்கு அதிக நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலமாகக் கொடுத்ததில் முதல் இடத்தில் இருக்கிறது இந்த நிறுவனம். ஹைதராபாத்தை மையப்படுத்திய இந்த நிறுவனம் 584 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவிற்கு நன்கொடையாக அளித்திருக்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான Western UP Power Transmission என்ற நிறுவனம் 80 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு கொடுத்துள்ளது. மொத்தமாக 664 கோடி ரூபாய் இந்த குழுமத்தால் பாஜகவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் தொடர்புடைய நிறுவனங்கள்

அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் 545 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு அளித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன.

இதில் மும்பையை மையப்படுத்திய க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் (Qwik Supply Chain Private Limited) 375 கோடி ரூபாயை அளித்துள்ளது.

அம்பானியின் வர்த்தக உதவியாளர் சுரேந்திர லுனியா, ரிலையன்ஸ் நிர்வாகிகள் லக்‌ஷ்மிதாஸ், ராமச்சந்திர ராஜா மற்றும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் இருக்கக் கூடிய சத்யநாராயணமூர்த்தி வீர வெங்கட கோர்லெப் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் 170 கோடி ரூபாய் பாஜகவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனங்கள் மூலம் மொத்தமாக அளிக்கப்பட்ட நன்கொடைகளில் 94% பாஜகவிற்குத் தான் அளிக்கப்பட்டுள்ளது.

கெவெண்டர்ஸ் குழுமம் (Keventers Group)

மூன்றாவது அதிகபட்சமாக கெவெண்டர்ஸ் குழுமம் 351.92 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு அளித்துள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமம் (Aditya Birla Group)

நான்காவது அதிகபட்சமாக ஆதித்யா பிர்லா குழுமம் 285 கோடியை தனது ஐந்து துணை நிறுவனங்கள் மூலமாக பாஜகவிற்கு அளித்துள்ளது.

பார்தி ஏர்டெல் குழுமம் (Bharti Airtel Group)

சுனில் பாரதி மிட்டல் தலைமையிலான ஏர்டெல் குழுமம் தனது நான்கு துணை நிறுவனங்கள் மூலம் பாஜகவிற்கு 236.4 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியுள்ளது.

வேதாந்தா நிறுவனம் (Vedanta)

உலோக ஆலைகள் மற்றும் சுரங்கங்களை நடத்தக்கூடிய அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் 230.15 கோடி ரூபாயை பாஜகவிற்கு அளித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். அந்த ஸ்டெர்லைட் நிறுவனம் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமானதே என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000… ’நீட்’டுக்கு மாற்றுத் தேர்வு : அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாமக வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? : தங்கர் பச்சான் விளக்கம்!

அமலாக்கத்துறை கைது… இரவு முழுவதும் எங்கு இருந்தார் கெஜ்ரிவால்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share